குறுவை தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லாத காரணத்தால், குறுவை  தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

காவிரி  பாசன மாவட்டங்களின் பாசன ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும்,  நீர் இருப்பு 13 டி.எம்.சியாகவும் குறைந்து விட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கூடுதலாகவும்,  அணைக்கான நீர்வரத்து  15,000 கன அடிக்கும் கூடுதலாக இல்லாத நிலையில் , மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமற்ற ஒன்றாகும். அதனால்,  நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்காக  ஜூன் 12-ஆம் தேதி  தண்ணீர் திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.

அந்தமான நிகோபர் தீவுகளில் நேற்று தான் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ள கேரளத்திலும், கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை ஜூலை மாத இறுதியில் தான் தீவிரமடையும்.  எனவே, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவதாக இருந்தாலும்  அது ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான்  சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதை கருத்தில் கொண்டு தான் மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15-ஆம் தேதி வாக்கில் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு  வல்லுனர்  குழு பரிந்துரைத்துள்ளது. அப்படியானால்,  குறுவை சாகுபடி  செய்ய திட்டமிட்டிருக்கும் உழவர்களுக்கு  மாற்றுவழி என்ன? என்பதை தமிழக அரசு காட்ட வேண்டும்.

ஆகஸ்ட் மாத முதல் வாரத்திற்கு முன்பாக குறுவை சாகுபடி செய்யப்பட்டால் தான் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக அறுவடை செய்ய முடியும். தாமதமாக குறுவை நடவு செய்யப்பட்டால் குறுவை பயிர்கள் வடகிழக்குப் பருவமழையில் சிக்கி சேதமாகும் ஆபத்துள்ளது. மேற்கண்ட அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்து பார்க்கும் போது நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யப்படுவதை ஊக்குவிப்பது தான் சாத்தியமான, புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதற்கு தமிழக அரசின் குறுவை தொகுப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டில் போதிய தண்ணீர் கிடைக்காததால் குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று போக பயிர்களும்  கடுமையாக பாதிக்கப்பட்டன. நடப்பாண்டிலாவது குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டால் தான்  கடந்த ஆண்டு  ஏற்பட்ட  இழப்பிலிருந்து  உழவர்கள்  ஓரளவாவது மீண்டு வர முடியும். இதைக் கருத்தில் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களுக்கான  குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். குறிப்பாக,  அனைத்துப் பகுதிகளுக்கும்  வேளாண்மைக்காக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும்  வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவரை மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK founder asked govt to open mattur dam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->