கொந்தளித்த அன்புமணி! 35 நாட்களில் 89 மீனவர்கள் கைது! மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை! - Seithipunal
Seithipunal


தொடரும் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: 35 நாட்களில் 89 மீனவர்கள் கைது - மத்திய, மாநில அரசுகள் இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கைப் பார்க்கப் போகின்றன ? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த  13  மீனவர்கள் வங்கக்கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் தான்  மீன் பிடித்து வருகின்றனர் என்ற போதிலும்,  அவர்களை சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,



வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட 2  மாத தடைக் காலம் முடிவடைந்து  ஜூன் 16-ஆம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதன் பின் 35 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில்,  இதுவரை 7 கட்டங்களில் மொத்தம் 89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10  பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 நாட்களுக்கும் மேலாக சிறையில் வாடும் நிலையில்  இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து கைது செய்தது மட்டுமின்றி, அவர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும்.  இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து  89 மீனவர்கள் சிறையில் வாடி வரும் நிலையில், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில்  வாடிக் கொண்டிருக்கின்றன.


தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இந்திய - இலங்கை அதிகாரிகள், தமிழக  - இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து,  இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை பா.ம.க. வலியுறுத்தியும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.  தமிழக முதல்வரோ, ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போது  வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதுடன் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும்  அவலம் இனியும் தொடரக் கூடாது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதற்காக மத்திய அரசுக்கு அனைத்து வழிகளிலும் தமிழக அரசு  அழுத்தம் தர வேண்டும் என்று இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pmk leader Dr anbumani ramadoss statement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->