ஆகமவிதி படிதான் பழனி கோவிலில் பூஜை நடைபெறுகிறது - உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்.!
pooja held at agama rules in palani temple tn govt explanation in high court
ஆலயம் வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, "நேற்று முன்தினம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து அந்தக் கோவிலில் நடைபெறும் 48 நாட்கள் மண்டல பூஜை ஆகம விதிப்படி நடைபெறாமல் பெயரளவில் நடைபெறுகிறது. இதனால், இந்த கோவிலில் நடைபெற உள்ள தைப்பூச திருவிழா தடைபடுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே, பழனி கோவிலில் மண்டல பூஜை ஆகம விதிப்படி நடைபெறுவதற்கு உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு விடுமுறை தினமான நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் சண்முகசுந்தரம், "தைப்பூச திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடைப்படாது. 48 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையில் 11 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும்.
பூஜையின் இறுதி நாளில் 1008 சங்கு வைத்து பூஜைகள் நடைபெறும். கோவிலில் ஆகம விதிப்படி தான் அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது'' என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
English Summary
pooja held at agama rules in palani temple tn govt explanation in high court