குண்டர் ராஜ்ஜியம் நடத்தும் கரூர் பாலாஜி கும்பல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்க.! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் நண்பர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்த அதிகாரிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய, குண்டர் ராஜ்ஜியம் நடத்தும் கரூர் பாலாஜி கும்பல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "இன்று அதிகாலை முதல் தமிழக அமைச்சர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் கரூர் வீடுகள் மற்றும் நிறுவனங்கள்; அவருடைய சகோதரர் மற்றும் மைத்துனர், நண்பர்கள் என 40-க்கும் மேற்பட்டோருடைய இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை (RAID) ரைடில் இறங்கியுள்ளனர். 

பொதுவாக தொழில், வணிகம் மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படத்துறையினர் ஆகியோரது இல்லங்களில், அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் ஆய்வுகளில் ஈடுபடுவது வழக்கமே.

ஆனால், தமிழகத்தின் முதலமைச்சருக்கு மிகவும் நெருங்கியவராக கருதப்படக் கூடிய டாஸ்மாக் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளை தன்வசம் கொண்டுள்ள அமைச்சர் மற்றும் அவருடைய சகாக்கள் மீது வருமான வரித்துறை திடீர் ஆய்வில் இறங்குகிறது என்றால் அதை வழக்கத்திற்கு மாறாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

சாதாரண ஒரு நிகழ்வாக கருத இயலாது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல், வரி ஏய்ப்பு செய்தல்,  முறைகேடாக பணம் ஈட்டுதல், பெரிய அளவிலான ஊழல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட வகைகளில் பணம் சேர்ப்பது குறித்த ஊர்ஜிதமான தகவல்களும் வலுவான ஆதாரங்களும் கிடைத்த பின்னரே மாநில அமைச்சர் ஒருவரை குறிவைத்து வருமான வரித்துறை களத்தில் இறங்க முடியும்.

செந்தில் பாலாஜிக்கு இதுபோன்ற ரெய்டுகள் ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே பலமுறை இதற்கு பழக்கப்பட்டுப் போனவர்தான். 2011 முதல் 2016 வரையிலும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை பணம் கொடுத்தும் அப்பணிகளை பெற முடியாதவர்கள் உச்ச நீதிமன்றம் வரையிலும் சென்று செந்தில் பாலாஜியை எப்படியாவது தண்டித்தே தீர வேண்டும் என்ற அளவிற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து, அந்த விசாரணைகளும் தீவிரப் படுத்தப்பட உள்ளன.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையிலும் என்று ஒரு பழமொழி உண்டு. ஊழல் உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பழக்கப்பட்டு போனவர்கள் தங்களை ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.  சுயமரியாதை, மானம் என்பதெல்லாம் என்ன விலை? என்றே அவர்கள் கேட்பார்கள். 

2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்புதான் அமமுகவில் இருந்தால் காலம் தள்ள முடியாது என்று தவ்விகுதித்து திமுக என்ற படகில் தொத்திக் கொண்டார். சேர்த்து வைத்ததில் ஒரு சிறு துளியை அள்ளி வீசி, வெற்றி பெற்றார். எதைப் பற்றியும் கூசாமல் எவ்வித ஈவிரக்கமும் இல்லாமல், மனித நேயம் அல்லாமல் வசூல் செய்து தி-ஸ்டாக்கிஸ்ட் குடும்பத்தின் கஜானாவை நிரப்ப எதிர்பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு சரியாக ஒரு ஆள் கைவசம் கிடைத்தது. 

2016 சட்டமன்ற தேர்தலின் போது செந்தில் பாலாஜியின் யோக்கிய அம்சங்கள்குறித்து அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களே பலமுறை எடுத்துரைத்துள்ளார். 

இன்றைய முதல்வர் ஸ்டாலினும் ’ஒரு அமைச்சர் எவ்வாறு இருக்கக் கூடாதோ அதற்கு இலக்கணமாக இருப்பவர் செந்தில் பாலாஜி’ என்று பல இடங்களில் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் மறந்து விட்டுப் பெயரளவில் மட்டுமே மதுவிலக்கு என்று சொற்றொடரோடு விளங்கக்கூடிய, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கக்கூடிய அந்த துறையோடு, பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் புரளும் மின்சாரத் துறையும் சேர்த்து அவரிடம் வழங்கப்பட்டது. 

ஒரு துறை இருந்தாலே போதும் அதில் சந்து பொந்து என்று பாராமல் புகுந்து விளையாடி அல்லது புதுப்புது யுக்திகளை எல்லாம் பயன்படுத்தி ஊழல் செய்து பழக்கப்பட்டவருக்கு இரண்டு துறை, அதிலும் டாஸ்மாக் மற்றும் மின்சாரம் கிடைத்தால் சும்மா இருப்பாரா? இரண்டு வருடத்தில் கோடி கோடியாகக் குவித்தார்.

டாஸ்மாக் கடைகளுக்கு அருகாமையிலேயே மது அருந்துவதற்காக மதுக்கூடங்கள் துவக்கப்பட்டு 5,500-க்கும் மேற்பட்ட பார்களில் சராசரியாக மாதம் ரூபாய் 1 லட்சம் முதல் 3.5 லட்சம் வரையிலும் டெண்டர் கோரி பலர் மாத மாதம் அரசுக்குச் செலுத்தி வந்தனர். 

சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டாலே மாதம்  ரூபாய் 50 கோடி அரசுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், டெண்டர் எடுத்தவர்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே செலுத்தி விட்டு, கடந்த 24 மாதத்தில் அனைத்தையும் சட்டவிரோதமாக அந்த மது கூடங்களை நடத்தி, அரசுக்குச் செலுத்த வேண்டிய அந்த தொகையை முழுமையாக கரூர் பார்ட்டிகள் இடத்திலேயே செலுத்தி வந்துள்ளனர். 

கடந்த இரண்டு ஆண்டில் சட்டவிரோதப்பார்கள் மூலமாக மட்டுமே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பாலாஜிக்கு பால்வார்க்கப்பட்டு இருக்கிறது. இதே போல டாஸ்மாக் துறையில் மட்டும் உற்பத்தியிலிருந்து காலி பாட்டில் சேகரிப்பு வரையிலும் ஒவ்வொரு படிநிலைகளிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்ததன் விளைவாக டாஸ்மாக்கில் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது; 

எனவே, இது பல்வேறு மாநிலங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கின்ற காரணத்தினால் மத்திய அரசே நேரடியாக விசாரணை செய்ய வேண்டும். கணக்காயத்துறை, வருவாய்த்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த 10 ஆம் தேதி ஆளுநர் இடத்திலே மனு கொடுத்தோம்.

அவர் செய்த ஊழல் – குற்றங்கள் - மோசடிகளை நிரூபிக்கக்கூடிய வகையில் மரக்காணத்திலும், மதுராந்தகத்திலும் 22 பேர் மரணம்; தஞ்சாவூரில் 2 பேர் மரணம் மற்றும் அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான சட்டவிரோத பார்கள் மூடப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. 

நாம் ஆளுநர் இடத்திலே சமர்ப்பித்த குற்றச்சாட்டுகளுக்கு அவர்களுடைய அடுக்கடுக்காகச் செயல்களாலேயே ஆதாரங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய வேளையில்  நேற்றைய தினம் தன்னுடைய மானம் கெட்டுவிட்டது என்று சென்னை எழும்பூர் உயர் நீதிமன்றத்தில் தான் நேரடியாகச் செல்லாமல் ஏதோ ஒரு வழக்கறிஞர் உடைய பெயரில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். "முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும் - உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் - தவறிழைத்தவனை அவனது நிழல் கூட விரட்டும்” என்பதற்கு இணங்க நேற்று அதிகாலை செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்களுடைய இல்லங்கள், நிறுவனங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.

வருமான வரித்துறையினர் சாதாரணமான சிவில் அதிகாரிகளைப் போன்றவர்கள். அவர்கள் ஆயுதபாணிகள் அல்ல, நிராயுத பாணிகள். அவர்கள் இது போன்று திடீரென்று செல்லக்கூடிய இடங்களுக்கு முன்பாக அந்த செய்தி கசிந்து விடும் அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்து விடும் என்பதற்காக முன்கூட்டியே பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு தெரிவிப்பதில்லை. 

அதாவது அது எந்த மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில காவல்துறையினரிடம் தெரிவிப்பது வழக்கம் இல்லை. சில வேளைகளில் அவர்கள் காவல்துறையின் உதவியை நாடலாம். அதாவது, அரசியல் பின்புலம் அற்ற வணிக நிறுவனமோ, தொழில் அதிபராக இருந்தால் காவல்துறையினரின் உதவியை முன்கூட்டியே நாடுவார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் தமிழ்நாட்டில் அமைச்சரவையில் அங்கம் பெறக்கூடியவர். 

அதுவும் கரூரைச் சொந்த மாவட்டமாகக் கொண்டிருக்கக் கூடியவர். வருமான வரித்துறையினரின் வருகை குறித்த தகவல்களை அந்த மாவட்டத்தினுடைய காவல்துறை அதிகாரிகள் இடத்திலேயே தெரிவிக்கப்பட்டால் உயர் அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், அவருக்கு கீழே இருக்கக்கூடிய அதிகாரிகளில் பலருக்கு ஆளுங்கட்சி அமைச்சரோடோ அல்லது ஆளுங்கட்சி நிர்வாகிகளோடு உறவிருக்கும் என்பதால் அச்செய்தி கசிந்து விடும் என்ற அடிப்படையில்  முன்னெச்சரிக்கையாக வருமான வரித்துறை எவ்வித தகவலும் இல்லாமல் சோதனைக்காகச் சென்றிருக்கிறார்கள் என்றால் அவர்களது கடமையைச் செய்கிறார்கள் என்று பொருள்.

காவல்துறையினர் கூட எல்லா நேரங்களிலும் ஆயுதபாணிகளாக இருப்பதில்லை. எனவே, வருமான வரித்துறையினர் நிராயுதபாணியாக இருந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளைக் காண்பித்து இது போன்ற சோதனைக்காக வந்திருக்கிறோம் என்று சொன்ன பிறகும் பாலாஜியோ அல்லது அவரது சகோதரரோ அல்லது உறவினர்களோ, நண்பர்களோ பூரண ஒத்துழைப்பு கொடுத்து இருக்க வேண்டியது  கட்டாயம். 

யார் வீட்டில்? யார் சோதனை இடுவது? என்று ஒரு கும்பல் வருமானவரித்துறை அதிகாரிகளை குறிப்பாக பெண் அதிகாரி உட்பட பலரை வசைபாடியும், அச்சுறுத்தியும், அவர்கள்மீது தாக்குதல் தொடுத்தும் உள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட 4 அதிகாரிகள் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் என்று சொன்னால் எந்த அளவிற்கு செந்தில் பாலாஜியும், அவர்களைச் சார்ந்தவர்களும் கரூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குண்டர் ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இந்த அடாவடி செயலை ஒரு கணம் கூட ஏற்றுக் கொள்ள இயலாது.

இதே கரூர் பார்ட்டிகள் தான் தமிழகத்தினுடைய அனைத்து மது கூடங்களுக்கும் சென்று சட்டவிரோதமாக பார் நடத்தச் சொல்லி, பணம் வசூல் செய்து கொண்டிருந்தவர்கள். டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டிப் பணம் பறித்தவர்களும் இவர்கள்தான். இப்பொழுது தங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு லட்சம் கோடி ஊழலுக்கு உண்டான ஆதாரங்கள் வருமான வரித்துறையினருக்கு கிடைத்து விடுமோ? என்ற அச்சத்தில் செந்தில் பாலாஜியும் அவரைச் சார்ந்தவர்களும் அலறுவதும், நிராயுதபாணியான அதிகாரிகளுடன் மோதுவதும், அவர்கள்மீது வன்முறையில் ஈடுபடுவதும் தமிழகத்தில் ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதைக் காட்டுகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி உட்பட அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார் எனினும் முதல்வருக்கு பரிந்துரை செய்து உடனடியாக செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஒருவேளை அது போன்ற செயல் நடைபெறவில்லை எனில், தமிழ்நாடு ஆளுநர் அவர்களே தனக்கு இருக்கின்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி செந்தில் பாலாஜியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது நடைபெற்ற சம்பவங்கள் அனைத்திற்கும் செந்தில் பாலாஜியை முழுப் பொறுப்பாக்கி அவர் கைது செய்யப்பட வேண்டும். அதுவே சட்டத்தின் ஆட்சியின் சாட்சியாகும். தப்பு செய்தவர்கள் தண்டனை பெற்றே தீர வேண்டும். கடந்த இரண்டு வருடத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத் துறையில் அவர் அடித்த கொள்ளைக்குத் தண்டனை பெறுவதிலிருந்து செந்தில் பாலாஜி இனி ஒரு கணமும் தப்பிக்க முடியாது; தப்பிக்கவும் விடக் கூடாது" என்று டாக்டர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthiya Thamilakam Head Say About Senthilbalaji ITRaid


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->