புதுக்கோட்டை || பெண் தற்கொலை வழக்கு - மூன்று காவல்துறையினர் பணிமாற்றம்.!
puthukottai lady sucide case police officer posting change
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகில் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் மனைவி கோகிலா. இவர், கடந்த சனிக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அப்போது கோகிலா, அருகில் ஒரு நோட்டு தாளில் அவர் எழுதியுள்ளதாவது, "தன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு அதிகாலையில் வந்து இழுத்துச் சென்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்தேன். இதனால் சாகிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து கோகிலாவின் கணவர் நீலகண்டன் புகார் ஒன்றுக் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது,
திமுக பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவி புவனேஸ்வரி, கீரமங்கலம் காவல் நிலையம் எஸ்.ஐ ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி மற்றும் கீரமங்கலம் காமராஜ், நெய்வத்தளி துரைமாணிக்கம் என 6 பேர் தன் மனைவி தற்கொலைக்கு காரணமானவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மேற்பனைக்காடு மற்றும் கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்த கோகிலாவின் கணவர் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்டனர். ஆனால், போலீசார் அவர்களை கைது செய்யும் வரை பிரேதப் பரிசோதனைக்கு போகமாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், நேற்று அறந்தாங்கி கோட்டாட்சியரான சொர்ணராஜ், கோகிலாவின் வீட்டிற்கு விசாரணைக்காக சென்று காத்திருந்த நிலையில், உறவினர்கள் "கைது நடவடிக்கை எடுக்கும் வரை விசாரணைக்கு வரமாட்டோம்" என்று வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, நேற்று மாலை அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோகிலாவிற்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள், "தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை சடலத்தை வாங்கமாட்டோம்" என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட கோட்டாட்சியர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போலீசார் மீதும் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என்பதை உறவினர்கள் கோரிக்கையாக முன் வைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கோட்டாட்சியர் உறுதி அளித்த பிறகு சடலத்தை பெற்றுக் கொண்டனர்.
மேலும், தற்கொலை செய்து கொண்ட கோகிலா அருகில் இருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போலீசார்களை வெவ்வேறு காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை செய்யும் காவல் அதிகாரியையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.
English Summary
puthukottai lady sucide case police officer posting change