பேசினாலே கைதா? அதிகாரத்திமிரின் உச்சம்! "பாசிச திமுக அரசு" - சீமான் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் முத்துப்பாண்டி கைதுசெய்திருப்பது அதிகாரத்திமிரின் உச்சம் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "சிறப்பு முகாமிலுள்ள நான்கு தமிழர்களை விடுவிக்கக்கோரி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் எனதருமைத்தம்பி முத்துப்பாண்டி அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சிறப்பு முகாமெனும் சித்ரவதைக்கூடத்திலிருந்து ஈழச்சொந்தங்களை வெளிவிடக்கோரி, இனஉணர்வு கொண்ட மண்ணின் மகனாய் தம்பி முத்துப்பாண்டி வெளிப்படுத்திய அறச்சீற்றத்திற்கு எதிர்வினையாக அடக்குமுறையை ஏவுவது ஏற்கவே முடியாத கொடுங்கோன்மையாகும்.

கருத்துரிமை, சனநாயகம், சமூகநீதி என ஒருபுறம் பேசிக்கொண்டே, மறுபுறம் பாசிசத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, மாற்றுக்கருத்துக் கொண்டவர்களையும், எதிர்நிலையில் அரசியல் செய்யக் கூடியவர்களையும், அரசின் மீது விமர்சனத்தை வைக்கக் கூடியவர்களையும் அடக்கி ஒடுக்கி, அவர்களது குரல்வளையை நெரிக்க முயலும் திமுக அரசின் செயல்பாடு வெளிப்படையான சனநாயகப் படுகொலையாகும். ‘ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்’ எனத் தேர்தலுக்காக முழக்கமிட்டுவிட்டு, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களை வெளியே விடாததோடு அவர்களது விடுதலைக்காகப் பேசுவோரையும் கைதுசெய்து சிறைப்படுத்துவது அதிகாரத்திமிரின் உச்சம்!

இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் ஆணவத்தில், அதிகாரப்பலம் தரும் மமதையில், எளிய மக்கள் மீதும், மண்ணுரிமைப்போராளிகள் மீதும், இனமானத்தமிழர்கள் மீதும் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை ஏவலாம்; கொடுஞ்சட்டங்களைப் பாய்ச்சலாம்; பேசவிடாது தடைபோடலாம்; சிறைப்படுத்தி செயல்பாட்டை முடக்கலாம். ஆனால், இவை யாவும் நிரந்தரமானதில்லை. அதிகாரமும் எவருக்கும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை; பெரும் பெரும் சாம்ராஜ்யங்களே சரிந்து விழுந்த வரலாறு இங்குண்டு; கொடும் ஆட்சியாளர்களே மண்டியிட்டு வீழ்ந்த வரலாறுண்டு. அதனைத்தான் ஆளும் திமுக அரசுக்கும் நினைவூட்டுகிறேன்.

தம்பி முத்துப்பாண்டி அவர்கள் பேசியதில் எந்தத் தவறுமில்லை; என்னுடைய கருத்தைத்தான் அவர் அம்மேடையில் எதிரொலித்தார். அதற்காக வழக்குத் தொடுத்து, சிறைப்படுத்தி, அச்சுறுத்திவிடலாம் என்றெண்ணி ஆளும் வர்க்கம் நினைக்குமென்றால், அதனைவிட மடமைத்தனம் வேறில்லை. இச்சமயத்தில், தம்பி முத்துப்பாண்டிக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசானது மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் தம்பி முத்துப்பாண்டி மீது தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SEEMAN Condemn to DMK Govt For Muthupandi arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->