மே 18ஆம் தேதி இன எழுச்சி பொதுக்கூட்டம்! சீமான் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மே-18 ஆம் தேதி சென்னை பூவிருந்தவல்லியில் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெறும் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொன்றுதொட்டக் காலம் முதலான தமிழின வரலாறு அரசர்களின் பெருமிதக்கதைகளால் நிரம்பி வழிகிறப்பெட்டகமல்ல. மாறாக, வீரமும், அறமும், அறிவும், பண்பாடும் மிகுந்த மூத்த இனம் ஒன்றின் முதுவாழ்வியலாகும். வரலாற்றுப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம், கால ஓட்டத்தில் வந்தவர்களை எல்லாம் வாழ வைத்துவிட்டு, சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழுகிற இழிநிலையானது, இந்த உலகத்தில் வேறு எந்த இனத்திற்கும் ஏற்படக்கூடாதப் பெருங்கொடுமையாகும். 

தமிழர்களுக்கென்று தமிழ்நாடு, தமிழீழம் என இரு தாயகங்கள் இருந்தும், மண்ணின் பூர்வக்குடி மக்களாகிய நாம், நம்முடைய உரிமைகளுக்காகவும், அடிப்படைத்தேவைகளுக்காகவும் பிறரிடம் கையேந்தி நிற்கிற அவலநிலைக்குத் தள்ளப்பட்டு நிற்கிறோம்.

இப்பூமிப்பந்தில் தமிழர்கள் படையெடுத்து செல்லாத நாடில்லை என்கிறப் பெருமித வரலாறுகள் மறைந்து, தமிழனுக்கென்று இவ்வுலகில் ஒரு நாடில்லை எனும் கொடும் நிலைக்கு ஆளாகி நிற்கிறோம். தமிழ்நாடு எனும் பெருந்தாயகமானது மெல்ல மெல்லச் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்க, தமிழீழ நாடானது இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, மொத்தமாக அழித்து முடிக்கப்பட்டுவிட்டது.

பன்னெடுங்காலத்துக்கு முன்னதாக நம்மை அண்டிப்பிழைக்க வந்த சிங்களர்கள், நம் நிலத்தின் அதிகாரத்தைப் பிடித்து, நம் மண்ணை ஆக்கிரமித்து, நம் உரிமைகள் யாவற்றையும் மறுத்து, தாயகத்திலேயே நம்மை அடிமைப்படுத்தி, நம் இனத்தை முற்றாக அழித்தொழித்து இன்றைக்கு அகதிகளாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள்.

சிங்கள இனவாதத்தின் கொடும் பசிக்கு இரண்டு தமிழர்களைப் பலிகொடுத்துவிட்டு, இன்றைக்குக் கையறு நிலையில் நிற்கிறோம். நீதிகிடைத்திடாத நிற்கதியற்ற துயரச்சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

சிங்கள இனவெறியாட்டத்தை எதிர்த்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறவழியில் போராடிய தந்தை செல்வா அவர்களது போராட்டத்தின் நீட்சியாகவே, ஆயுதமேந்திய மக்கள் புரட்சியை தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னெடுத்தார்கள்.

அறம் வழி நின்று மறம் மொழி பேசிய நம்முயிர்த்தலைவர் அன்பு அண்ணன் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தையும் ஒற்றைப்புள்ளியில் எதிர்த்து களத்திலே நின்றார்.

எந்த ஆயுதத்தைக்கொண்டு, எம்மின மக்களை சிங்கள அரசப்பயங்கரவாதம் கொன்றொழிக்கிறதோ, அதே ஆயுதத்தை ஏந்தி, எமது இன மக்களை காப்பேனென தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் என்கிற மாபெரும் மக்கள் இராணுவத்தை கட்டியெழுப்பினார். 

உலக நாடுகளெங்கும் கடன்களைப்பெற்று, ஆயுதங்களை வாரிக்குவித்து, படைகளைப்பெற்று, ஆலோசனைகளைக் கேட்டு சிங்கள இராணுவம், விடுதலைப்புலிகளை எதிர்த்தபோது, எவரிடமும் கையேந்தாமல், சொந்த இன மக்களையே படையாகத் திரட்டி, இராணுவமாகக் கட்டமைத்து உலகமே வியக்கும் வகையில் களத்தில் எதிர்நின்று போராடினார் நம்முயிர்த்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

தமிழர்களின் வீரத்தை களத்தில் எதிர்கொள்ள முடியாத சிங்கள இனவாத அரசு, அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில், நயவஞ்சக நகர்வுகளை இந்திய வல்லாதிக்கத்தின் துணைகொண்டு நகர்த்தி, தமிழர்களை சொந்த மண்ணிலேயே அழித்தொழிக்கும் வேலைகளைக் கடந்த 2003ம் ஆண்டு முதல் செய்யத்தொடங்கியது. விளைவாக, 2009 ஆம் ஆண்டு ஒரு பாரிய இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்தது.

இதுவரை வரலாறு பார்க்காத உதிரக்காட்சிகள் அவை‌. ஒரு நாட்டுக்கும், பிறிதொரு நாட்டுக்கும் இடையே போர் நடக்கும்போது பயன்படுத்தக்கூடாதென உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வீசி, ஆயுதங்களைக்கொண்டு, துள்ளத்துடிக்க இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றுகுவித்து, தமிழினத்தை இரத்தச்சகதியிலே தள்ளியது சிங்கள அரசப்பயங்கரவாதம்.

தங்கள் உயிரையே ஆயுதமாக ஏந்தி, மக்களைக் காக்கக் களத்தில் நின்று, உயிரீகம் செய்திட்டார்கள் நம் மாவீரர் தெய்வங்கள்.

13 ஆண்டுகள் கடந்து விட்டப்பிறகும்கூட காற்றில் கரைந்த நம் இன சொந்தங்களின் மூச்சுக்காற்றை இன்னும் உணர முடிகிறது. தாய் நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட நம் தமிழீழச்சொந்தங்களின் உதிர வாடை இன்னும் நம் நினைவில் நின்று நம்மைப் போராடத்தூண்டுகிறது. இனவெறியால் நிகழ்த்தப்பட்ட நம்மினப்படுகொலையை ஒருநாளும் கடந்துபோக முடியாது.

நம்மினத்திற்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை மறந்துவிட்டுச் செல்ல முடியாது. நம்மை நம்பியே, அந்நிலத்தில் புலிமறவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்திருக்கிறார்கள். கடைசி நம்பிக்கையென நம்மையே திசைகாட்டிச் சென்றிருக்கிறார்கள். வீரத்தமிழினம் வீழ்ந்துவிடாது; 

மானத்தமிழினம் மாண்டுவிடாது எனக் காட்டுவதற்கு நாம் மீண்டெழ வேண்டும்; விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே என உலகுக்கு உரைக்க வேண்டும். எல்லாம் முடிந்துவிட்டதென சிங்கள இனவெறிக்கூட்டம் எக்காளமிட்டு சிரித்து முடிப்பதற்குள், நாம் இன்னொரு தாய் நிலத்திலே இன்னொரு வடிவிலே எழுந்து நிற்கிறோம். 

இறக்கப்பட்டப் புலிக்கொடியை ஏந்தி நிற்கிறோம். ‘புலிகளின் தாயகம்! தமிழீழத்தாயகம்’ என்பதை, ‘தமிழர்களின் தாகம். தமிழீழத்தாயகம்’ என மாற்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒற்றைக்குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்.

மே 18, நம்மினம் அழித்தொழிக்கப்பட்ட நாள், நம்மினப்பகை முடிக்க தமிழர்கள் ஒவ்வொருவரும் சூளுரைக்க வேண்டியப் பேரெழுச்சி நாள், அன்னைத்தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக தமிழ்ப்பேரினம் ஆர்த்தெழ வேண்டிய பெருநாள்.

என்னுயிர் சொந்தங்களே! என் உயிருக்கினிய எனது தம்பி, தங்கைகளே, நம்மினம் அழித்தொழிக்கப்பட்ட நாளை நினைவிலேந்தி, இனப்பகை முடிக்க, இனவிடுதலைக்களத்தில் இறுதி இலக்கை அடைய, உறுதியேற்க அணிதிரள்வோம்.

அதே இலட்சிய முழக்கத்தை நெஞ்சிலேந்தி, அதே உன்னத இலக்கை அடைய அணிதிரள்வோம். ஒன்றுகூடுவோம். இனப்படுகொலை நாளையொட்டி, மே 18 அன்று நாம் தமிழர் கட்சியின் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் நடைபெறவிருக்கிறது.

அதுசமயம், இனமான உணர்வோடும், இனவிடுதலைக்கனவோடும் இனமானத்தமிழர்கள் ஒவ்வொருவரும் திரண்டு வர வேண்டுமென என்னுயிர் சொந்தங்களுக்குப் பேரழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman public meeting in Poonamalli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->