செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை.!
Senthil Balaji undergo bypass surgery at 4 am tomorrow
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையின் போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை முடிய 3 முதல் 4 மணி நேரங்கள் வரை ஆகலாம். இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி 3 முதல் 5 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் நீடிப்பார். அறுவை சிகிச்சைக்காக கால்களில் இருந்து நரம்புகள் எடுக்கப்படும் என்பதால் செந்தில் பாலாஜி நடப்பதில் சிரமம் இருக்க கூடும். இதனால் சில மாதங்கள் ஓய்வு எடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி மாத்திரை, மருந்துகள் எடுத்து கொண்டால் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என தெரிய வந்துள்ளது.
English Summary
Senthil Balaji undergo bypass surgery at 4 am tomorrow