அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி; அதிர்ச்சியில் சிவகங்கை..!
Student electrocuted at government school in Sivaganga
சிவகங்கை அரசுப் பள்ளி மாணவன் சக்தி சோமையா (14 வயது) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பொய்யாவயலை சேர்ந்தவர். அங்கு உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தவர்.
இன்று கணினி வகுப்பின்போது, ஆய்வகத்தில் கணினிக்கு மாணவன் மின் இணைப்பு கொடுக்க முயன்ற போது, அவர் மீது திடீரென மின்சாரம் பாபாய்ந்துள்ளது. மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்ட மாணவனை, ஆசிரியர்கள் மீட்டு காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால், குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவனின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.உயிரிழந்த மாணவனுக்கு தந்தை இல்லாத நிலையில், தாய் மட்டுமே தனியாக இருந்து படிக்க வைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Student electrocuted at government school in Sivaganga