ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு - நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்.!
summan send to nayinar nagendran for money seized case
கடந்த 6-ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
அதன் படி தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் மூன்று பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜ.க. மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது.
அந்த வகையில், வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் உள்ளிட்டோர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு வந்து காவல் உதவி ஆணையர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.
அப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு மீண்டும் நாளை சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
English Summary
summan send to nayinar nagendran for money seized case