மதுவிலக்கின் மகிமைகளை பிகாரிடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்!!
Tamil Nadu govt should learn the glories of alcohol prohibition from Bihar
மதுவிலக்கின் மகிமைகளை பிகாரிடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அருகை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
குடும்ப வன்முறைகள் தொடர்பான 21 லட்சம் வழக்குகள் தவிர்ப்பு, 18 லட்சம் இளைஞர்கள் உடல் பருமன் குறைபாட்டுக்கு ஆளாவது தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைவு, ஆண்களின் மது குடிக்கும் அளவு பெருமளவில் குறைவு உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் ஒற்றை ஆணையால் சாத்தியமாகியுள்ளன. பிகாரில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 2016-ஆம் ஆண்டில் பிகார் அரசு பிறப்பித்த அரசாணை தான் மேற்கண்ட அனைத்து நன்மைகளுக்கும் காரணமான ஒற்றை ஆணையாகும்.
The Lancet Regional Health – Southeast Asia இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் இந்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகப்புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுவினர் இணைந்து, பிகாரில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து ஆய்வு செய்து இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர். இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்க, பிகாரில் மதுவிலக்கு நடைமுறப்படுத்தப்பட்டு இருப்பதால் அங்கு அமைதி, மன நிம்மதி, மது சார்ந்த நோய்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து மக்கள் விடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
லான்செட் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்களைக் கடந்து, மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மேலும் பல உண்மைகளும் உள்ளன. பிகார் மாநிலத்தின் மக்கள்தொகை, 2016-ஆம் ஆண்டுக்கு முன்பாக அங்கு விற்பனையான மதுவின் அளவு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது கடந்த 8 ஆண்டுகளில் மதுவால் நிகழ்ந்திருக்க வேண்டிய 8 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பிகார் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இவை நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் ஆகும்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பும் போதெல்லாம் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும், அரசின் வருவாய் குறைந்து விடும் என்றெல்லாம் தமிழக ஆட்சியாளர்களால் பூச்சாண்டி காட்டப்படுகிறது. பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் அங்கு கள்ளச்சாராயமும் பெருகவில்லை, அம்மாநில அரசின் வருமானமும் குறையவில்லை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் மது வணிகத்தால் குடும்ப வன்முறைகள், குற்றங்கள், சாலை விபத்துகள், மனநல பிரச்சினைகள், தற்கொலைகள், ஆண்மைக் குறைபாடு, இளைஞர்களின் செயல்திறன் குறைவு, பொது அமைதி மற்றும் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பணி செய்வதற்கு தகுதியான இளைஞர்கள் கிடைக்காமல் உற்பத்தி குறைகிறது. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உயிரிழப்பதால் இளம் கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவிலேயே அதிக கைம்பெண்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
மது வணிகத்தால் ஏற்படும் இவ்வளவு பாதிப்புகளும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை. மாறாக, மதுவணிகத்தால் அரசுக்கு கிடைக்கும் வருமானம், தனிப்பட்ட முறையில் தங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு மதுவணிகத்தை ஊக்குவித்து வருகின்றனர். இது சரியான பாதை அல்ல.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் மது வணிகம் நடைபெற்ற போது சென்னை மாகாணத்தில் நான்கு மாவட்டங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார் இராஜாஜி. அதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார் உத்தமர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். அந்த மதுவிலக்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் காமராசர், பக்தவச்சலம், அறிஞர் அண்ணா ஆகியோர் பாதுகாத்தனர். மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும், மக்கள் நலனே முக்கியம் என்று கருதி இந்த முடிவை அவர்கள் எடுத்தனர்.
அவர்களைப் போலவே, மதுவணிகத்தை விட மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை பிகார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.
English Summary
Tamil Nadu govt should learn the glories of alcohol prohibition from Bihar