மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரம்... அண்ணன் அடித்துக்கொலை.! தம்பி படுகாயம்...!
The mysterious gang murder the Young man in Chennai
சென்னையில் மது குடிக்க பணம் தராததால் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிகண்டன் (30). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது தம்பி பிரபாகரன் (27). இவர்கள் அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த வீட்டில் போதிய வசதி இல்லாததால், திருமலை நகர் பகுதியில் வேறொரு வாடகை வீட்டிற்கு செல்ல அண்ணன்-தம்பி இருவரும் நேற்று முன்தின இரவு வீட்டிலிருந்து பொருட்களை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
அப்பொழுது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அண்ணன்-தம்பி இருவரையும் வழி மறைத்து மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து பணம் தர அவர்கள் மறுத்ததால், அண்ணன் தம்பி இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் பலத்த காயமடைந்த தம்பி பிரபாகரன் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மணிகண்டனை அடித்துக் கொன்ற மர்மகும்பல் குறித்து விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The mysterious gang murder the Young man in Chennai