பசுமையான இடம்... மலை ஏற்றம் செல்ல... பசுமையான தீர்த்தமலை.!
theerthamalai
தருமபுரியிலிருந்து ஏறத்தாழ 59கி.மீ தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து ஏறத்தாழ 66கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அதிசயங்களும், அற்புதங்களும் கொண்ட இடம்தான் தீர்த்தமலை.
சிறப்புகள் :
தீர்த்தமலையின் உச்சியில் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில். இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மற்றும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன.

இந்த அழகான மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாக அரைமணிநேரத்தில் நடந்து செல்லலாம். மலையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரம், செடி, கொடிகளும் இயற்கை அழகுகள் நம்மிடம் இருக்கும் பயணக்களைப்பை போக்குகின்றன.

இங்கு உள்ள கோவில் வளாகத்தில் ஒரு குன்று அமைந்துள்ளது. இந்த குன்றிலிருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குள அளவிற்கு ஒரு குழாயின் வழியே நீர் ஊற்றிக் கொண்டே இருக்கும். இதனுடைய சிறப்பு என்னவென்றால் கோடை மற்றும் மழை காலங்களில் குழாயின் வழியாக ஊற்றும் நீரின் அளவு மாறாமல் இருக்கும்.

தீர்த்தமலையில் உள்ள தீர்த்தங்கள் பலவகையில் இருக்கின்றன. அவை அக்னி தீர்த்தம், கௌரிதீர்த்தம், குமாரா தீர்த்தம், வசிஸ்ட தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம், அனுமன் தீர்த்தம், ராம தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தங்கள் நம் நோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

தற்போது இந்த மலைமீது இளைஞர்களின் பார்வை அதிகமாக திரும்பியுள்ளது. ஏனென்றால் மலை ஏற்றம் செல்ல நேர்த்தியான படிக்கட்டுகளுடன் அழகாக அமைந்துள்ளது.