"சொகுசு காரில் வெல்டிங் மிஷின்.... ரூ.5 கோடி மதிப்புடைய நகை".. வெளியான பரபரப்பு தகவல்..!!
Thieves came in luxury car in Chennai jewelery shop robbery
சென்னை அடுத்த பெரம்பூரில் ஸ்ரீதர் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று காலை மீண்டும் 9:00 மணி அளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக சென்ற பொழுது கடையின் முன்பக்க ஷெட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடையினுள்ளே சென்று பார்த்த பொழுது லாக்கர் கதவு வெல்டிங் மிஷினால் உடைக்கப்பட்டு அதிலிருந்து ஒன்பது கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை பார்க்க சென்ற ஸ்ரீதருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. சிசிடிவி ஒயர்களை அறுத்துவிட்டு ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடி சென்றது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ந்து போன ஸ்ரீதர் கொள்ளை சம்பவம் குறித்து திருவிக நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணையானையர் ரம்யபாரதி, புளியந்தோப்பு துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவு 2 மணிக்கு இனோவா காரில் வந்த கும்பல் ஒன்று நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றது கண்டறியப்பட்டது.
போலீசார் ரோந்து பணியில் வராத நேரத்தை கணித்து கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Thieves came in luxury car in Chennai jewelery shop robbery