வேங்கைவயல் விவகாரம்... வந்து விழுந்த கேள்வி.. ஆவேசம் அடைந்த திருமாவளவன்.. செய்தியாளர்கள் உடன் வாக்குவாதம்.!!
Thirumavalavan argue with reporters on question related to vengaivyal issue
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நினைவு அரங்கம் சிதம்பரத்தில் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுக்கு பதில் அளித்த திருமாவளவன் "பலமுறை இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வரிடம் பேசியுள்ளேன். சட்டமன்றத்திலும் விசிக சார்பில் பேசியுள்ளோம்.
தமிழக அரசு பொருத்தவரை உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நாங்கள் நம்பிக்கை உடன் இருக்கிறோம்" என பதிலளித்தார். அப்பொழுது மற்றொரு செய்தியாளர் "எதன் அடிப்படையில் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்..? இவ்வளவு நாள் ஆகிறது இன்றும் ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த திருமாவளவன் "நாட்கள் என்பது ஒரு பிரச்சனை அல்ல. அப்படி பார்த்தால் ராமஜெயம் கொலை வழக்கில் 12 வருடங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு நாம் ஏதாவது உள்நோக்கம் கற்பிக்கப்பட முடியுமா..? சில வழக்குகளில் நிர்வாக சிக்கல் இருக்கலாம். விசாரணையில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இருக்கலாம். எனவே தமிழக அரசு தலித் மக்களுக்கு எதிராக இல்லை.
வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய முயற்சியில் அரசு ஈடுபடவில்லை" என பேசிக் கொண்டிருக்கும்போது செய்தியாளர் ஒருவர் "சிறிய கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லையே" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திருமாவளவன் "சிறிய கிராமம் பெரிய கிராமம் என்பதில் பிரச்சனை இல்லை. அரசு தலித் மக்களுக்கு எதிராக செயல்படவில்லை. அதற்கான தேவையும் அரசுக்கு இல்லை. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கட்டும். அதுக்கு என்ன அவசரம் இருக்கிறது. காலக்கெடு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா..? புலனாய்வில் அதிகாரிகளுக்கு இருக்கின்ற தேக்கம். அந்த தேக்கத்திற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை" என பதில் அளித்தார்.
அப்பொழுது அதே செய்தியாளர் இப்படி நீங்களே திமுகக்காரர் போன்று பேசலாமா என சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான திருமாவளவன் "இது போன்ற பேசும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். இதெல்லாம் நாகரீகமற்ற பேச்சு. இதுபோன்று நாகரிகமற்று கேள்விகளை கேட்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட கருத்துகளை என் மீது திணிக்க வேண்டாம். ஊடகவியலாளர்களுக்கு என்ன மரியாதையோ அந்த மரியாதை கொடுக்கும் அளவுக்கு உங்கள் கேள்விகளும் இருக்க வேண்டும்.
திமுகவை எதிர்த்து எங்களைப் போன்று போராட்டம் நடத்தியவர்கள் யாரும் இல்லை. தலித்துகளின் பிரச்சனைக்காக இந்த இரண்டு ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம். நாளையும் கிருஷ்ணகிரியில் போராட்டத்தை நடத்த உள்ளோம். திமுக கூட்டணியில் இருப்பதால் இது போன்ற அநாகரிகமாக பேசக்கூடாது" என செய்தியாளர்களை பார்த்து ஆவேசமாக பேசினார்.
அதற்கு மற்றொரு செய்தியாளர் "இல்லை என்றால் மறுத்துவிட்டு போங்க. எதுக்கு செய்தியாளர்களை பார்த்து ஆவேசமாக பேசுகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார். இதனால் கொதித்து போன திருமாவளவன் "இதில் எங்க ஆவேசமானேன், அவர் திமுகக்காரர் என்று கேள்வி எழுப்புகிறார். நான் திமுகக்காரனா..? இதெல்லாம் ரொம்ப அநாகரிகமான பேச்சு. நாங்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம், அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம், புலனாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படி என்றால் என்ன காரணம் என்று நீங்கள் சொல்லுங்கள்" என கையை நீட்டி ஒருமையில் மீண்டும் ஆவேசமாக பேசினார்.
அதனையும் விடாத செய்தியாளர்கள் எவ்வாறு கையை நீட்டி ஆவேசமாக பேசலாம் என மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமாவளவன் "நான் வேணும்னா கையை கட்டிக் கொண்டு பேசட்டுமா.? ஊடகவியலாளர் முன்பு குனிந்து பேச வேண்டுமா.? திமுகக்காரர் போன்று பேசுவதாக உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது" என வாக்குவாதத்தில் ஈடுபட்டு செய்தியாளர்கள் சந்திப்பை பாதியில் முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
English Summary
Thirumavalavan argue with reporters on question related to vengaivyal issue