இந்த வரலாறு தெரியுமா? கார்த்திகை தீபம்: பழந்தமிழர் பண்பாட்டின் தீப ஒளித் திருநாள்! - Seithipunal
Seithipunal


தைப் பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்று தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடும் பாரம்பரியமான திருவிழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்றாகும். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் கார்த்திகை தீபத்தை போற்றுகின்றன.

பழதமிழ் இலக்கியங்கள் ‘அறுமீன்’ (ஆறு நட்சந்திரங்கள்) என கார்த்திகையை குறிப்பிடுகின்றன. 

“மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு உறுத்து மாலை தூக்கி
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர வருக தில் அம்ம”
 - என்கிறது அகநானூறு

‘உயர்ந்த வானத்தில் சிறிய முயல் போன்ற கறை திகழ, முழுநிலவும் ஆறு வின்மீன்களும் சேரும் நள்ளிரவில் வீதிதோறும் விளக்கு வைத்து, மாலை தொங்கவிட்டு பலரும் விழாவை கொண்டாடுவதாக’ இப்பாடலில் அகநானூறு கூறுகிறது.    

“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகை உடையவாகி
புலம் எல்லாம் பூத்தன தோன்றி- சில மொழி
தூதொடு வந்த மழை” 
- என்கிறது 'கார் நாற்பது' எனும் சங்க இலக்கிய நூல். 

‘கார்த்திகை தீப நாளில் தீபங்கள் ஒளிர்வது போன்று, செங்காந்தள் மலர்கள் பூத்துள்ளன. கார்காலம் கண்டு தலைவன் வருவான்’ என தலைவிக்கு தோழியொருவள் ஆறுதல் கூறும் பாடல் இதுவாகும்.

“ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள்ஆள் எதிர்த்து ஓடி,
தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே-
போர்க் கொடித் தானை, பொரு புனல், நீர் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து”
 - என்கிறது 'களவழி நாற்பது' எனும் சங்க இலக்கிய பாடல்.

‘சோழ மன்னருடைய போர்க்களத்தில் ஒருவருக்கொருவர் போரிட்டு வெட்டிக்கொள்வதால் கொட்டுகின்ற இரத்தம் கார்த்திகை விழாவில் எரியும் தீப விளக்குகளை போன்று காட்சியளிக்கின்றன” என்கிறது இப்பாடல்.

இவ்வாறாக, பல சங்க இலக்கிய பாடல்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, கார்த்திகை நாள், ஆறு வின்மீன்கள், ஆறு இதழ்கள் கொண்ட செங்காந்தள் மலர், ஆறுமுகனாகிய முருகன் என எல்லாவற்றையும் கொண்டாடுகிறது.

காலம் காலமாக தமிழர் என்கிற அடையாளம் நீடித்திருக்க தமிழர் திருவிழாக்கள் உதவுகின்றன. அன்றும் இன்றும் தமிழர்களை ஒரே இனமாக கட்டி வைப்பதில் இவையும் முதன்மை பங்காற்றுகின்றன.

நாம் எல்லா திருநாட்களையும் கொண்டாடுவோம். அவற்றில் தமிழர் திருவிழாக்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுப்போம் - பசுமை தாயகம் அருள் இரத்தினம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THiruvannamalai karthigai Deepam History


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->