64 தூண்கள், 400 மரச்சிற்பங்கள்..!! உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது..!!
Tiruvarur Azhitherotam has started
சைவத்தின் தலைமை இடமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை பெற்றது. அதன்படி நடப்பாண்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் தொடங்கியுள்ளது. விண்ணை முட்டும் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆழித்தேரானது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மாட வீதிகள் வழியாக திருவாரூர் நகரில் பிரம்மாண்டமாக அசைந்தாடி வரும் அழகு காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரை சீராக இயக்க இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் பொருத்தப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியில் ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்களைக் குறிக்கும் வகையில் 4 குதிரைகள், 64 கலைகளைக் குறிக்கும் வகையில் 64 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 400 மரச்சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது. ஆழித்தேரில் சுமார் 50 டன் எடையுள்ள மலர்கள் மற்றும் காகிதங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது
சுமார் 350 டன் எடை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று காலை 7.30 மணி அளவில் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆழித்தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் குற்ற செயல்களை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிா்க்க 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Tiruvarur Azhitherotam has started