தமிழக மீனவர்கள் மீது மீண்டும் பயங்கர தாக்குதல்! இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!
TN Fisherman attacked
நாகப்பட்டினம் அருகே உள்ள கோடியக்கரையில் மீன்பிடியில் இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில் மற்றும் சாமுவேல் ஆகிய நால்வர், அனைத்து சட்ட அனுமதிகளும் பெற்று புதன்கிழமை விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரை அருகே அவர்கள் மீன்பிடிக்கும்போது, இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அரிவாள், கட்டை, கல் கொண்டு வன்முறையுடன் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நால்வரையும் கடலில் தள்ளி சித்திரவதை செய்ததுடன், அவர்களது விசைப்படகில் இருந்த மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் செல்போன்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இக்கொடிய தாக்குதலில் பலத்த காயமடைந்த மீனவர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் தொடர்ந்து நடந்துவருவது, கடலில் செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பே இல்லையா என்ற கேள்வியையும், கொந்தளிப்பையும் மீனவக் கூட்டமைப்புகளில் கிளப்பி உள்ளது.