தமிழகத்தில் தனியார் பள்ளியில் இலவசமாக உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கலாம்! எப்படி? என்ன தகுதி?!
TN Govt Private school free admission and teaching RTE
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான ஆர்டிஇ (RTE) விண்ணப்ப பதிவு விரைவில் தொடங்க உள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், சுமார் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ், எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், 8-ம் வகுப்பு வரை கல்விக்கட்டணமின்றி படிக்கலாம்.
சிறுபான்மை அந்தஸ்து இல்லாத அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளில் வரும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், எச்ஐவி பாதித்தோர், 3ம் பாலினத்தவர்கள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நலிந்த வர்க்கங்களைச் சேர்ந்தோரின் வருட வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு, வருமானம், சாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் அவசியம் தேவை.
விண்ணப்பதாரர்கள் www.rte.tnschools.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஒருவர், தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள 5 பள்ளிகள் வரை தேர்வு செய்யலாம்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குமேல் விண்ணப்பங்கள் வந்தால், பள்ளியில் குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர்.
வரும் கல்வியாண்டான 2025-26க்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
English Summary
TN Govt Private school free admission and teaching RTE