தனியார் பேருந்துகளை மிஞ்சும் அளவுக்கு விரைவில் வருகிறது தமிழக அரசு விரைவு பேருந்து!
TN Govt SRTC new update
தமிழக அரசு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய விரைவு பேருந்துகளை ஏப்ரல் இறுதிக்குள் சேவையில் இணைக்க உள்ளது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட டெண்டர் அடிப்படையில், 50 விரைவு பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இதில் 29 ஏசி பேருந்துகளும், 21 சாதாரண விரைவு பேருந்துகளும் அடங்கும். தனியார் பேருந்துகளில் உள்ள வசதிகளை ஒத்த வடிவத்தில், அரசு பேருந்துகளும் மேலும் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய பேருந்துகளில் தீயணைப்பு அமைப்பு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. சிறிய புகை காணப்பட்டாலே அலாரம் ஒலிக்கும், மேலும் தீ பரவினால், ஓட்டுநர் பட்டனை அழுத்தியவுடன் ரசாயனப் பொழிப்பு மூலம் தீயணைக்கப்படும். தீ அதிகமாக பரவினால், ஒட்டுநரின் செயல்பாட்டை எதிர்பாராமல், தானாகவே தீயணைக்கும் முறை செயல்படும். முன்பு என்ஜினில் மட்டும் இருந்த இந்த அமைப்பு, தற்போது பயணிகள் பிரிவிலும் பொருத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக, பின்நோக்கி இயக்கக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு இருக்கையின் அருகிலும் அவசரகால எஸ்ஓஎஸ் பட்டன் வழங்கப்பட்டுள்ளன. இரவு நேர பயணத்திற்காக வாசிப்பு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பயணிகளுக்கு அதிக பாதுகாப்பும் வசதியுமளிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.