தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
TNGovt Announce For Sugar cane Farmers
தமிழக கரும்பு விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2020-21 அரவைப்பருவத்திற்கு கரும்பு மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு, மாநில அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.192.50 வழங்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளால், தற்போது கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2015-16 முதல் 2019-20 அரவைப்பருவம் வரை கரும்பு விலை உயர்த்தப்படாமல், டன்னுக்கு ரூ. 2750 மட்டுமே வழங்கப்பட்டது. 2020-21 அரவைப்பருவத்திற்கு ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ. 2707.50 ஐ விட கூடுதலாக உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.192.50 முதல்வர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டது. இதனால், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ. 2900 கிடைத்தது.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளினால், 2020-21 அரவைப் பருவத்தில் 95,000 எக்டராக இருந்த கரும்புப் பதிவு, 2022-23 அரவைப் பருவத்தில் 1,40,000 எக்டராகவும், கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 139.15 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவித்தவாறு, மத்திய அரசு 2021-22 ஆம் அரவைப் பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ. 2755 ஐ காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ. 195 வழங்கிடும் வகையில், மாநில அரசு ரூ.199 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விபரத்தை சேகரித்து, கூர்ந்தாய்வு செய்து, சிறப்பு ஊக்கத்தொகையினை விரைவில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்க சர்க்கரைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.199 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால், பொது, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் 2021-22 அரவைப்பருவத்தில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,950 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்று, அந்த அறிவிப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
TNGovt Announce For Sugar cane Farmers