குட் நியூஸ்.!! இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை உண்டு.!! விதிகளை தளர்த்தியது தமிழக அரசு.!!
TNgovt relaxes rules in kalaingar urimai thogai scheme
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியமாக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் தமிழக முழுவதும் பயனாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த திட்டத்திற்கு தகுதியான பயனாளர்களை தேர்வு செய்வதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், உச்ச வயது ஏதுமில்லை, சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம்ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு 1,000 கிடையாது. 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ1,000 உரிமைத் தொகை வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழக அரசின் இத்தகைய நிபந்தனைகளுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் விமர்சனங்களை தெரிவித்ததோடு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் விதவை உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவி தொகை பெறும் குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடையாது என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விதிகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய 3 தேதிகளில் நடைபெறும் உள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த குடும்பங்களில் உள்ள தகுதியான பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TNgovt relaxes rules in kalaingar urimai thogai scheme