தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் - இஸ்லாமிய கட்சி கோரிக்கை.!
TNML SAY NEW YEAR
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று காரணமாக நட்சத்திர ஹோட்டல்கள், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது,
"தமிழகத்திலும் ஒமைக்ரான் காலடி எடுத்து வைத்துள்ளது. ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலருக்கு அதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த ஆண்டும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால் இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மெரினா கடற்கரையில் வருகிற 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவலால் பண்ணை வீடுகளிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. தற்போது மெரீனா கடற்கரையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்ணை வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஆகவே, நட்சத்திர ஹோட்டல்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து தடை விதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் வி.எம்.எஸ்.முஸ்தபா தெரிவித்துள்ளார்.