அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை பின் தொடர மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்.!
TNPCB requested to follow their Facebook page
அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை பின்தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் துவக்கம் தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல், அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு அடிப்படையில் கண்காணித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான புகார்களை ஆய்வு செய்தல் ஆகியவை வாரியத்தின் சில முக்கியமான செயல்பாடுகளாகும்.
இந்த செயல்பாடுகளில் பெரும்பாலானவை அண்மைக்காலங்களில் இணையவழியில் மேற்கொள்ளப்படுகின்றன. இது வாரியம் மற்றும் பொதுமக்கள் உட்பட பிற பங்குதாரர்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை மிகவும் குறைத்துள்ளது. எனவே, வாரியம் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளிடையே அதிக தொடர்புகளை ஏற்படுத்தவும், அதிக புரிதல் மற்றும் நம்பிக்கையை வளர்க்கவும், அண்மைக்காலங்களில் பல முன்முயற்சிகளை எடுத்து வருகிறது.
அத்தகைய ஒரு முன்முயற்சியானது ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி "நேரடி கலந்தாய்வு அமர்வு" நடத்துவதாகும். இதில் தனிநபர் / தொழிற்சாலைகள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம் மற்றும் சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
மாசு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் புகார் அளிக்கலாம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கலாம். கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற முதல் நேரடி கலந்தாய்வு அமர்வுக்கு பொதுமக்களின் ஆதரவு சிறப்பாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருந்தது.
அடுத்த கட்டமாக, அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளை தொடர்புகொள்ள வாரியம் சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்த முன்வந்துள்ளது. இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கம், பொதுமக்கள் உட்பட பிற துறைகள் மற்றும் தொழிற்சாலைகளுடன் தொடர்பை அதிகரிப்பதாகும்.
வாரியம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக எடுத்த சிறப்பான முன்முயற்சிகள், திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் பற்றி தெரிவிக்கவும், பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு குறைப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாரியத்தின் செயல்திறனை மேம்படுத்த ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் விமர்சனங்களைப் பெறவும் சமூக ஊடக தளம் பயன்படுத்தப்படும். வாரியம் அதன் கண்காணிப்பு நிலையங்களிலிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் காற்று மற்றும் நீரின் தரம் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கவும் சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்தும்.
வாரியம் மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களை அடைய முதற்கட்டமாக தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கை உருவாக்கியுள்ளது. வாரியத்தின் முகநூல் பக்கத்தை வாரிய இணையதளத்தின் (www.tnpcb.gov.in) மூலம் அணுகலாம். முகநூல் பக்கத்தை வரும் 14ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்படுத்தலாம். மேலும், தனது முகநூல் பக்கத்தில் பின்தொடர வாரியம் அனைவரையும் அழைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TNPCB requested to follow their Facebook page