சென்னை || 19 கிலோ கஞ்சாவை தின்ற காவல் நிலைய எலிகள்... காவல்துறையின் விளக்கத்தால் அதிர்ந்து போன நீதிபதி..!!
TnPolice explained station rats ate 19kg cannabis
கடந்த 2018ம் ஆண்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்றதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த நிலையில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான குற்ற பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை கோயம்பேடு போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதன்படி போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் 30 கிலோ கஞ்சாவில் 11 கிலோ மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். கோயம்பேடு போலீசார் பதிவு செய்த தகவல் அறிக்கையிலும் குற்றப்பத்திரிகைகளும் பெண்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்த நிலையில் 19 கிலோ கஞ்சா என்னவானது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கோயம்பேடு போலீசார் "இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட காவல்நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. காவல் நிலைய கட்டிடம் பழுதடைந்ததால் பாதுகாப்பு இல்லாமல் மழையால் பாதிக்கப்பட்ட எலிகளால் கடித்து தின்றதில் அதன் அளவு குறைந்து விட்டது" என கோயம்பேடு போலீசார் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட கஞ்சா எலிகள் தின்று விட்டதாக போலீசார் அளித்த நூதன பதிலால் அதிர்ந்து போன நீதிபதி இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பெண்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் இணையதளத்தில் தற்பொழுது பேசும் பொருளாகியுள்ளது. இதனால் இணையதள வாசிகள் எலியையும் காவல் துறையினரையும் கலாய்த்து வருகின்றனர்.
English Summary
TnPolice explained station rats ate 19kg cannabis