இன்று தைப்பூச திருவிழா தேரோட்டம்.. பழனியில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்! - Seithipunal
Seithipunal


பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாதேரோட்டம் இன்று  மாலை நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும் தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.

 பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைபூச விழாவையொட்டி தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

மேலும் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும் தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.முன்னதாக இன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரி நடைபெற்றது.  இதன்படி பழனி வரக்கூடிய திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

பாதயாத்திரையில் வரும்போது களைப்பு தெரியாமல் இருக்க முருகனை வேண்டி சரண கோஷம் எழுப்பியபடி ஆடியும், பாட்டு பாடியும் பக்தர்கள் வந்தனர். பழனி வந்த பின்பு சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து திருஆவினன்குடி, பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெரிசலை கட்டுப்படுத்த அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதன்படி கோவில் செல்லும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து குடமுழுக்கு நினைவரங்கம், யானைப்பாதை வழியாக சென்றனர். 

கூட்டம் காரணமாக நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பழனியில் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் உதவி மையங்கள், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டது. 

பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக சாலை நெடுகிலும் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்களில் உணவு, குடிநீர், ஐஸ்கிரீம், இளநீர் என வெயிலுக்கு ஏற்ற பானங்கள் வழங்கப்பட்டன. பழனி தைப்பூச திருவிழாவையொட்டி கூட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு பணியில் தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is the Thaipusam festival. Lakhs of devotees throng Palani!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->