அரசியலே தெரியவில்லை - பிரேமலதாவை விமர்சித்த போக்குவரத்து துறை அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


''தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவிற்கு அரசு நிர்வாகமும், அரசியலும் தெரியவில்லை என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 2,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடந்தது. இந்த விழாவில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெறுவது உறுதி. அதற்கு தமிழக முதல்வரின் இலவச பேருந்து பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பல்வேறு திட்டங்களே காரணம். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் தனியார் ஆம்னி பேருந்துகளில் உள்ளதைப் போல, செல்போன் சார்ஜ் வசதி மற்றும் படுக்கை, இருக்கை வசதி, லக்கேஜ் வைப்பதற்கான வசதி போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பயணியர் சிரமமின்றி சொகுசாக பயணிக்கலாம். தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே சுமார் 20,000 பேருந்துகள் உள்ள மிகப்பெரிய போக்குவரத்துக் கழகம் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம். தற்போது 685 பேர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனராக பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிதாக 7,200 பஸ்கள் வாங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டு, 1,000 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

புதிதாக, 7,200 பேருந்துகளை வாங்கிவிட்டு 600க்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்தி விட்டு எப்படி அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்க முடியும். பிரேமலதா அரசு நிர்வாகம், அரசியல் தெரியாமல் பேசுகிறார். இலவச பேருந்துகள், இலவசம் கொடுத்ததால் தான் போக்குவரத்து துறை உயிர் பெற்றிருக்கிறது. இது போக்குவரத்து துறை சார்பில் செய்யப்படும் செலவு அல்ல; இதற்காக தமிழக முதல்வர் நிதி வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு, 2,500 கோடி ரூபாய் தமிழக முதல்வர் போக்குவரத்து கழகத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளார். அந்த நிதி வருவதால் தான் போக்குவரத்து தொழிலாளர்கள் மாதந்தோறும் ஒன்றாம் தேதி ஊதியம் பெறுகின்றனர். மற்ற மாநிலங்களில் தாமதமாக வழங்குவது, சில நேரங்களில் மாதக்கணக்கில் தாமதமாக ஊதியம் வழங்குவது போன்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதுபோல தமிழக போக்குவரத்துக் கழகத்தில் கிடையாது. இவ்வாறு சிறப்பாக போக்குவரத்துக் கழகம் செயல்படுவதற்கு காரணம் இலவச திட்டம் கொடுத்ததால் தான். அரசு திட்டங்களை பிரேமலதா கிண்டல் செய்வதை விடுத்து, பொதுமக்களுக்கான சேவையை செய்ய வேண்டும்.

பேருந்து கட்டணம் உயர்வு என்பது தற்போது கிடையாது. மற்ற மாநிலங்களில் டீசல் விலை உயரும்போதெல்லாம் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport minister sivasangar speech about premalatha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->