முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!
Udhay Thanks to CM for Kovai cricket stadium
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சருக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை விடுத்த ஒரு அறிவிப்பில், "கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன். விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர். தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த பதிவில், "தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எண்ணற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும். சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Udhay Thanks to CM for Kovai cricket stadium