வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தமிழக அரசு தேர்வுசெய்ய வேண்டும் - டி.டி.வி தினகரன்
Vadalur vallalar issue ttv dinakaran statement
வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருப்பதற்கு வடலூர் பார்வதிபுரம் கிராம மக்கள், சன்மார்க சங்க தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறிருப்பதாவது,
அரசு சார்பில் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, வள்ளலார் அவர்கள் நிறுவிய சத்திய ஞானசபை பெருவெளியில் புதிய கட்டுமானம் உள்ளிட்ட எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும், பெருவெளி பொதுமக்கள் கூடி ஜோதி வழிபாடு நடத்துவதற்கான பொது வெளியாக தொடர வேண்டும் எனவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வள்ளலார் அவர்களின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் காரணமாகவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச மையத்திற்கான கட்டுமானப் பணிகள் தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நாள் முதல் இன்று வரை அத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் மற்றும் வள்ளலாரின் பின்பற்றாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்து பிடிவாதப் போக்கில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கும், பக்தர்களுக்கும் எதிரான வகையில் நடைபெறும் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, கடலூர் மாவட்டத்திலேயே மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
English Summary
Vadalur vallalar issue ttv dinakaran statement