தமிழகத்தில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் - வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!
vanathi srinivasan press meet in kanniyakumari
மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து கொல்லங்கோட்டில் வானதி சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-
"வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை நமது நாட்டில் உள்ள அமைப்புகள். சட்டரீதியாக அவர்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். தவறாக நடவடிக்கை எடுத்திருந்தாலோ, உள்நோக்கம் இருந்தாலோ பாதுகாப்பதற்கு நீதிமன்றங்கள் உள்ளன. எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை அரசியல் ரீதியான நடவடிக்கை என பார்த்தால் தப்பு செய்பவர்கள் யாரையும் தண்டிக்கவே முடியாது.
அதனால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன், நீதியின் முன் பதில் சொல்லட்டும். ஒவ்வொரு கட்சிக்கும் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான நடைமுறை வைத்துள்ளது. தமிழகத்தில் ஒருசில அரசியல் கட்சிகள் அவர்கள் தூங்கிவிட்டு அதற்குப் பின் சின்னம் கிடைக்கவில்லை என பா.ஜ.க. மீது குற்றம் சுமத்துகிறார்கள். தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே சின்னம் ஒதுக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு செல்ல முடியும். இதில் பா.ஜ.க.வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழகத்தில் தேர்தல் களம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாறிக்கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் என்பது வாக்குப் பதிவின் போது மவுனமான மாற்றமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். 2026 பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். அதற்கான இலக்கில் பயணிக்கிறோம்.
தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. மட்டுமல்ல பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடை பெற்றுள்ளனர். இதில் ஊழல் என சொல்ல எதுவும் இல்லை. அப்படி ஊழல் என்றால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது, அதில் தங்களை இணைத்து தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்கலாம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
vanathi srinivasan press meet in kanniyakumari