புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்..வைத்திலிங்கம் MP கோரிக்கை!
Vande Bharat train should run from Puducherry to Mysore Vaithilingam MP request
கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக திண்டிவனத்திற்கு ரயில்வே பாதை அமைக்க வேண்டும். புதுச்சேரிக்கு புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ரயில்வே பட்ஜெட் மீதானவிவாதத்தில்பேசியதாவது,மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் அனுமதியோடு பேசுகிறேன். எனக்கு பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறை மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
ரூ.2.52 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசின் உதவியுடன், ரயில்வேயின் மொத்த வருமானத்தையும் 5 லட்சத்து 64 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால், இவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டாலும் ஏழை மக்களுக்கு உதவியாக ரயில்வே துறை இல்லை. ரயில்வேயில் எளியவர்கள் பயணிக்கும் வசதிகள் இல்லை. முன்பதிவு செய்யாத ரயில்களில் தொங்கி கொண்டும், ஒருவர் அமரும் இடத்தில் 4 பேர் அமர்ந்தும் பயணம் செய்யும் கொடுமையான நிலைதான் உள்ளது. இதே நிலைதான் குளிர்சாதன வசதியில்லாத ரயில்களிலும் உள்ளது. இவைகளுக்கு முக்கிய காரணம் ரயில்வே துறை கடந்த 5, 6 ஆண்டுகளாக வசதிகளை செய்யாததுதான். இதனால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எனவே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்காக ஒரு தனி ரயில்வே திட்டத்தை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஏழைகள் பயன்பெற முடியும். ஏழைகள் ஆயிரம் மைல்கள் 2, 3 நாட்கள் நிம்மதியில்லா பயணம் செய்ய வேண்டியுள்ளது. கதி சக்தி என்று சொல்லக்கூடிய துரிதமான நிர்வாகம் என்று கூறுகின்றோம் ஆனால் எதுவும் செய்யாதது வேதனையளிக்கிறது.
இவ்வளவு ரூபாய் செலவு செய்தாலும் கூட புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவில்லை. சரக்கு ரயில் பாதை (பிரைட் காரிடர்) வசதிகள் இரண்டுதான், அதுவும் வடமாநிலத்தில்தான் உள்ளது. இந்த வசதி தென் மாநிலத்தில் ஒன்று கூட இல்லை, தென்மாநிலத்தில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தென்னிந்தியா வளர்ச்சி பெறும் வகையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒரு சரக்கு ரயில் பாதை திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
சரக்கு ரயில் சேவை குறைவாக இருக்கும் காரணத்தால் 2007&2008 36 சதவீதமாக இருந்த சரக்கு பயணம் தற்போது 26 சதவீதமாக குறைந்துள்ளது. தேவைக்கு ஏற்ப சரக்கு ரயில் சேவை வழங்காததுதான் இதற்கு காரணம். சரக்கு ரயிலிற்கு தனியாகவும், வந்தே பாரத் விரைவு ரயில் செல்ல தனியாக ரயில்பாதை ஏற்படுத்த வேண்டும். தற்போது சரக்கு ரயிலின் சராசரி வேகம் 30 கிலோ மீட்டர்தான். அதை உயர்த்த நடவடிக்கை இல்லை. 2030ல் 50 கிலோ மீட்டர் என இலக்கு நிர்ணயித்துள்ளதை நீங்கள் அடைவீர்களா என்பது சந்தேகம். சரக்கு ரயிலுக்கு தனி பாதை உருவாக்கினால்தான் அந்த இலக்கை அடைய முடியும்.
ரயில்வே விபத்திற்கான கவாச் அமைப்பு ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 27 ரயில்வே விபத்துகள் நடைபெற்று பலர் உயிர் இழந்துள்ளனர். எனவே கவாச் அமைப்பை அனைத்து இடங்களிலும் உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி, தமிழகத்தில் புதியதாக ரயில்வே பாதைகள் அமைக்க வேண்டும். சென்னையில் இருந்து கடலூர் வரை புதிய பாதை அமைக்க வேண்டும். இது பயண நேரத்தை குறைக்க வேண்டும். எங்கள் உரிமையும் உள்ளது. கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக திண்டிவனத்திற்கு ரயில்வே பாதை அமைக்க வேண்டும். புதுச்சேரிக்கு என்று தனியாக வந்தே பாரத் ரயில் இல்லை. எனவே புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். காரைக்கால் பேரளம் ரயில்வே பாதை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். புதுச்சேரியில் இருந்து திருச்சிக்கு மெமோ ரயில் இயக்க வேண்டும். புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் விட வேண்டும். காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் ரயிலை எக்மோரில் நிறுத்த வேண்டும். காரைக்காலில் இருந்து அகமதாபாத்திற்கு ரயில் விட வேண்டும். ரயில்வேதுறையில் நிறைய காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளது. அதனை உடனடியாக நிரப்ப வேண்டும். அப்போது பிராந்திய மொழிகளில் விண்ணப்பங்களை வெளியிட்டு, அந்த பிராந்திய மக்களுக்கு உண்டான வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றார்.
English Summary
Vande Bharat train should run from Puducherry to Mysore Vaithilingam MP request