வயநாடு நிலச்சரிவு! பேராசைக் காரர்களின் நீலிக்கண்ணீர் நாடகம்! கொந்தளித்த பசுமை தாயகம் அருள்! - Seithipunal
Seithipunal


வயநாடு: பேராசைக் காரர்களின் நீலிக்கண்ணீர் நாடகம் என பசுமை தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் அருள்ரத்தினம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

வயநாடு நிலச்சரிவு பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. காடுகள் அழிப்பும், காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பெருமழையும் இதற்கான முதன்மை காரணங்கள் ஆகும்.

இந்தப் பேரிடருக்காக எல்லோரும் வருந்துகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை காப்பாற்றியிருந்தால் இந்த இழப்பினை பெருமளவு குறைத்திருக்க முடியும். ஆனால், அதற்கான சூழலியல் கோரிக்கைகளை கடுமையாக எதிர்த்த அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கூட இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அந்த வரலாற்றை காண்போம்:

மேற்குத் தொடர்ச்சி மலையின் சுழலமைப்பை காப்பாற்றும் நோக்கில் 2010ஆம் ஆண்டில் மாதவ் காட்கில் குழு அமைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் அக்குழு அளித்த அறிக்கையில், மராட்டிய மாநிலம் முதல் கேரளா - தமிழ்நாடு வரை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவை (75%) 'சூழலியல் உணர்திறன் பகுதியாக' (Ecologically Sensitive Areas - ESA) என அறிவித்து மலை அழிப்பை தடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது.

இதனை மாநில அரசுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கடுமையாக எதிர்த்ததால், இந்த அறிக்கையை ஆய்வு செய்ய கஸ்தூரிரங்கன் குழுவை அமைத்தனர். அவர் 75% பகுதியை காக்க வேண்டும் என்கிற கோரிக்கையை 50% பகுதியாக குறைத்தார்.

இதனையும் பலரும் ஏற்கவில்லை. கடைசியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வெறும் 56,865 சதுர கிலோமீட்டர் (37%) பரப்பளவை ESA பகுதியாக அளிப்பதற்கான 'ஐந்துமுறை திருத்தப்பட்ட' வரைவு அறிவிக்கையை 06.07.2022 அன்று வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை இதுவரை Notification ஆக வெளியிடப்படவில்லை.

அதாவது, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான பரிந்துரை கடந்த 14 ஆண்டுகளாக 'வரைவு' நிலையிலேயே உள்ளது. இன்னும் சட்டமாகவே இல்லை.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சூழலமைப்பை காப்பாற்றுவதற்கு தடையாக இருந்த அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் இப்போது வயநாடு பேரிடருக்காக கண்ணீர் வடிக்கின்றனர். நிவாரண நிதி அளித்துக் கொண்டிருக்கின்றனர் என்று இவ்வாறு முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wayanad Landslide Blue tears drama of greedy people


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->