வேதனையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்! வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்!
Wayanad Landslide Casualty Emergency Helpline Tamil Nadu Govt
கேரளா: வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த திரு.காளிதாஸ் (வயது 34) த/பெ.காளி என்பவர் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த திரு.காளிதாஸ் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த திரு. காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கேரளா வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தமிழக அரசு சார்பில் 1070 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுவரை உதவிக்கோரி எந்த அழைப்பும் வரவில்லை என்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Wayanad Landslide Casualty Emergency Helpline Tamil Nadu Govt