போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! CEIR போர்ட்டல் மூலம் மீட்டெடுக்கலாம்! எப்படி கண்டுபிடிப்பது?
Lost your phone Don worry You can recover it through the CEIR portal How to find it
"அய்யோ என் போன் காணாம போச்சே!" – இது இன்று தெருக்களிலும், பேருந்து நிலையங்களிலும், காவல் நிலையங்களிலும் கூட கேட்கப்படும் ஒரு பொதுவான கூச்சல். ஸ்மார்ட்போன் இன்று வெறும் தொலைபேசி சாதனம் மட்டும் அல்ல. அது நம்முடைய வங்கி விவரங்கள், சமூக ஊடக கணக்குகள், அலுவலக தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் எனப் பல முக்கிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான உலகமாக மாறியுள்ளது.
இந்த நிலைமையில் உங்கள் கைபேசி தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தருவதற்காகத்தான் CEIR போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
CEIR என்றால் என்ன?
CEIR என்பது Central Equipment Identity Register எனப்படும் மையக் கருவி அடையாளப் பதிவேடு. இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறை (DoT) இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், தொலைந்த அல்லது திருடப்பட்ட கைபேசிகளை நெட்வொர்க்கில் இருந்து முடக்கி, அதன் தவறான பயன்பாட்டைத் தடுப்பதுடன், மீண்டும் கண்டுபிடிக்கும் வழியையும் அளிக்கிறது.
IMEI எண் என்பது என்ன?
ஒவ்வொரு கைபேசியும் ஒரு தனித்துவமான 15 இலக்க IMEI எண் (International Mobile Equipment Identity) கொண்டிருக்கும். இது, கைபேசிக்கு கொடுக்கப்படும் "ஆதார் எண்" என சொல்லலாம். இந்த எண்ணை நீங்கள் கீழ்காணும் இடங்களில் காணலாம்:
-
கைபேசி பெட்டியில் உள்ள ஸ்டிக்கரில்
-
பேட்டரி பகுதி அருகே உள்ள ஸ்டிக்கரில்
-
*#06# என்று டயல் செய்தால் திரையில் தோன்றும்
CEIR போர்ட்டலில் புகார் அளிக்க எப்படி?
1. போலீஸ் புகார்:
முதலில், அருகிலுள்ள காவல் நிலையத்தில் கைபேசி தொலைந்ததாக FIR பதிவு செய்ய வேண்டும். அதன் நகலை பெற்றுக்கொள்ளுங்கள்.
2. CEIR போர்ட்டலுக்கு செல்:
https://ceir.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.
3. விண்ணப்பம்:
தொலைந்த கைபேசியின் IMEI எண், சிம் எண், போலீஸ் புகார் விவரங்கள், மற்றும் உங்கள் தொடர்பு விபரங்களைப் பதிவு செய்யுங்கள்.
4. OTP சரிபார்ப்பு:
உங்கள் கைபேசி எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு, உங்கள் புகாரை உறுதிப்படுத்துங்கள்.
5. குறிப்பு ஐடி பெறுதல்:
வெற்றிகரமாக புகார் பதிவு செய்யப்பட்டதும், ஒரு Request ID பெறுவீர்கள். இதை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
புகார் அளித்த பிறகு என்ன ஆகும்?
-
உங்கள் கைபேசி இந்தியாவின் எந்த நெட்வொர்க்கிலும் செயல்படாதபடி network blocking செய்யப்படும்.
-
திருடர்கள் அதை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ முடியாது.
-
இதனால், உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
போன் மீண்டும் கிடைத்தால்?
கைபேசி மீண்டும் உங்கள் வசம் வந்துவிட்டால், அதே Request ID ஐ பயன்படுத்தி CEIR போர்ட்டலில் unblock செய்யலாம். அதன் பின், உங்கள் கைபேசியை மீண்டும் சாதாரணமாக பயன்படுத்த முடியும்.
இன்றைய டிஜிட்டல் காலத்தில், CEIR போன்று நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு முறைகள், நம்மை பல பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றுகின்றன. கைபேசி திருட்டு என்பது ஒரு பெரும் தலைவலியாக இருந்தது. ஆனால் CEIR போர்ட்டலின் மூலம், தற்போது நம்மால் அதைச் சமாளிக்க முடிகிறது.
English Summary
Lost your phone Don worry You can recover it through the CEIR portal How to find it