ஆன்லைனில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? வாங்க பார்க்கலாம்...!
Online patta changing
சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்தவுடன் அடுத்தபடியாக, அந்த சொத்தின் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டும். சொத்து பதிவின் போதே பட்டா மாறுதலுக்கு பணமும் கட்டப்பட்டு விடுகிறது. ஆனால், பல நேரங்களில் பட்டா கிடைப்பதில்லை.
இந்த நிலையில், பத்திரப் பதிவு செய்யப்பட்ட சொத்து எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிந்து, அந்த பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளத்தில் கிடைக்கின்றன.
தற்போது அதை எளிமைப்படுத்த புதியதாக தமிழ்நிலம் எனும் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நிலம் tamilnilam.tn.gov.in.citizen இணையதளத்தில் பெயர், செல்போன், இ-மெயில் முகவரியை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.
பட்டா மாறுதல் யார் விண்ணப்பிக்கலாம்?
பட்டா மாறுதல் கோரும் எந்த ஒரு குடிமகனும் விண்ணப்பிக்கலாம்.
பட்டா மாறுதல் வகைகள் யாவை?
1. உட்பிரிவுள்ள இனங்கள்
2. உட்பிரிவு அல்லாத இனங்கள்
தேவைப்படும் ஆவணங்களின் விவரம் :
(இணைப்பின் அளவு 3 Bmக்கு மிகாமல் இருக்க வேண்டும்.)
1. கிரயப் பத்திரம்
2. செட்டில்மென்ட் பத்திரம்
3. பாகப்பிரிவினை பத்திரம்
4. தானப் பத்திரம்
5. பரிவர்தனை பத்திரம்
6. விடுதலைப் பத்திரம்
இந்த இணையதளம் மூலம் உட்பிரிவு, செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்த ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும்.
பட்டா மாறுதல் தொடர்பான பணிகளை முடிக்கும் வகையில் சாப்ட்வேரில் சொத்து தொடர்பான பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே உள்ள இணையதள பட்டாவில் சொத்தை கிரயம் முடித்து கொடுப்பவரின் பெயர் சரியாக உள்ளதா? சர்வே எண், உட்பிரிவு எண், கிரய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடம் ஆகியவை இணையதள சிட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி சரியாக உள்ளதா? வில்லங்கம் ஏதேனும் உள்ளதா? என்பன போன்று 5 கேள்விகளுக்கான பதிலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த நடைமுறை முடிந்ததும் தானாகவே இணையதளத்தில் பட்டா மாறுதல் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ள விவரம், கிரயம் முடித்து கொடுத்தவர் மற்றும் கிரயம் பெற்றவர்கள் பத்திரப் பதிவின் போது அளித்த செல்போன் எண்களுக்கு அனுப்பப்படும்.
கிரயம் முடித்தவர்கள் https://eservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்திரப் பதிவின் போது இ-மெயில் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கு பட்டா அனுப்பி வைக்கப்படும்.