அதிதீவிர புயலாக வலுப்பெற்றது "பிபோர்ஜாய்"...! சௌராஷ்டிரா - கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை...!
warning for Saurashtra Kutch coast for biborjoi cyclone
அதிதீவிர புயலாக மாறிய பிபோர்ஜாய் புயல் காரணமாக சௌராஷ்டிரா - கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய "மிக தீவிர புயல் பிபோர்ஜாய்", வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மும்பையில் இருந்து மேற்கே சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது சௌராஷ்டிரா - கட்ச் வடக்கு வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில், 15ஆம் தேதி அன்று மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) - மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும். இதனால் சௌராஷ்டிரா - கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 12-15 வரை மத்திய அரபிக் கடல், வடக்கு அரபிக் கடல் மற்றும் ஜூன் 15 வரை சவுராஷ்டிரா-கட்ச் கடற்கரைக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
warning for Saurashtra Kutch coast for biborjoi cyclone