டாஸ்மாக் ஊழியர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது ஏன்? திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை சுட்டிக்காட்டி சீமான் சாடல்!
Why have TASMAC employees not been made permanent yet? Seeman slams DMK govt for poll promises
கடந்த 2021 சட்டமன்றப் பொதுதேர்தலின்போது 10 ஆண்டுகள் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி 153 இன் படி டாஸ்மாக் ஊழியர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது ஏன்? இதுதான் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய முறையா?என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்:நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஓர் அங்கமாகச் செயற்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைக்கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார் .
மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள்போல நடத்தும் தமிழ்நாடு அரசின் வன்செயல் கொடுங்கோன்மையாகும் என குறிப்பிட்டுள்ள சீமான்,தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அதில் பணியாற்றும் ஊழியர்களை வேறு அரசுப் பணிகளுக்கு மாற்றவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மையான நீண்டகாலக் கோரிக்கை என்ற போதிலும், மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, அதில் பணியாற்றும் 27000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் கடந்த 23 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றிவரும் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இன்றுவரை தொகுப்பூதியத்தின் கீழ் மிகக் குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ள சீமான், அவர்கள் அனைவரையும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இதர விற்பனைப் பிரிவுகளான அமுதம் அங்காடி, ஆவின் மற்றும் பூம்புகார் கைவினைக் கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் போன்று காலமுறை ஊதியத்துக்கு மாற்றி உடனடியாகப் பணி நிரந்தரமும் செய்திட வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
மேலும், டாஸ்மாக் ஊழியர்களைஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதைத் தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி, மதுக்கூடங்களை நடத்தும் ஆளுங்கட்சியினர் விற்பனை நடவடிக்கைகளில் தலையிட்டு ஊழியர்களை மிரட்டி, தாக்கும் போக்கினையும் உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கூறியுள்ள சீமான் கடந்த 2021 சட்டமன்றப் பொதுதேர்தலின்போது 10 ஆண்டுகள் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி 153 இன் படி டாஸ்மாக் ஊழியர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது ஏன்? இதுதான் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய முறையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனைக்கூட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு, ஓய்வூதியம், சுழற்சிமுறையில் பணி மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும், இனியும் காலந்தாழ்த்தாமல் விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். என சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Why have TASMAC employees not been made permanent yet? Seeman slams DMK govt for poll promises