பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்; 11 தொழிலார்கள் உயிரிழப்பு..!
11 workers killed in a bomb attack in Pakistan
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் லாரியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டடிருந்து வெடிகுண்டு (IED) வெடித்ததில் லாரியில் சென்ற நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களை மீட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

.இது குறித்து, பலுசிஸ்தான் அரசு செய்தி தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறுகையில்; "இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடக்க விசாரணையில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு (IED), லாரி சென்றபோது வெடிக்க வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை குறித்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இதுபோன்ற கடந்த கால தாக்குதலுக்கு அங்குள்ள சட்ட விரோத பலுச் விடுதலைப்படை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், வடமேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தடைசெய்யப்பட்ட குழுக்கள் பாதுகாப்புப்படைகள், பாதுகாப்பு கட்டமைப்புகள், மக்கள் மற்றும் சீன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 22 பேர் பயணிகள் ஆகும்.
பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தானின் முஸாகேல் மாவட்டத்தில் ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த 22 பயணிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்த கட்டாயமாக வெளியேற்றி, அவர்களின் அடையாள அட்டைகள் சோதனையிடப்பட்ட பிறகு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதமும் இதே போன்ற சம்பவம் பலுசிஸ்தானில் நடைபெற்றது. அங்கே பேருந்தில் பயணித்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு 9 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏற்கனவே, அந்த பகுதியில் வகுப்புவாதம், பிரிவினை மற்றும் இன வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் முயற்சித்து வரும் சூழலில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
English Summary
11 workers killed in a bomb attack in Pakistan