போர் நிறுத்த ஒப்பந்தம்; 1,890 பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்கிறது இஸ்ரேல்!
Armistice Agreement Israel to release 1,890 Palestinian prisoners
இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய சிறை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். மேலும் இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.இந்தநிலையில் ஓராண்டை கடந்து காசாவில் நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்களில் 46,900 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 700 பேர் காயமடைந்து உள்ளனர் என்றும் இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான பணியில் ஈடுபட்டு வந்தனர் . போரை நிறுத்த ஏதுவாக நடந்து வரும் இதில் பலன் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதன்படி, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேல் மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது என தெரிவிக்கப்பட்டது .
இதையடுத்து பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டு உள்ள இஸ்ரேல் மக்கள் 94 பேரை பாதுகாப்பாக விடுவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் உயிரிழந்து இருக்க கூடும் என சொல்லப்படுகிறது .
மேலும் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பிடித்து வைத்துள்ள கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெறும் என எகிப்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய சிறை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இதற்கு ஈடாக, காசாவில் இருந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணய கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Armistice Agreement Israel to release 1,890 Palestinian prisoners