ராணுவ வளாகம் மீது தாக்குதல்; பாகிஸ்தானில் 9 பேர் பலி!
Attack on military compound; 9 killed in Pakistan
பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
பாகிஸ்தானில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுவருகிறது.இந்தநிலையில் பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு என்ற பகுதியில் ராணுவ வளாகம் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை கொண்டு சென்று மோத செய்து, அவற்றை வெடிக்க செய்தனர்.இது அங்கு பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அப்போது இந்த தாக்குதலில், பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள். 2 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது . மேலும் 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். 8 வீடுகள் வரை அந்த பகுதியில் சேதமடைந்தன என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் 12 பேர் அந்த ராணுவ வளாகத்திற்குள் புகுந்து செல்ல முயன்றனர்.அப்போது ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 6 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

மேலும் இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றது என கூறப்படுகிறது .கடந்த 2001-ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி படைக்கு எதிரான போரில் ஆப்கானிஸ்தான் தாலீபானுக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்ட இந்த ஆயுத குழு ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக இதே மாகாணத்தில் சில நாட்களுக்கு முன் இஸ்லாமிய மத பள்ளியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Attack on military compound; 9 killed in Pakistan