ரஷ்யாவின் மிர் கட்டண முறையில் இணைந்த கியூபா...!
Cuba joins Russia mir payment system
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன. இதனால் விசா, மாஸ்டர் கார்டு போன்ற அமெரிக்காவின் ப்ரீபெய்ட் பேமென்ட் சேவைகள் ரஷ்யாவில் முடங்கின. மேலும் பன்னாட்டு சந்தைகளில் ரஷ்யன் ரூபிளில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரஷ்யாவின் மத்திய வங்கியால் கொண்டுவரப்பட்ட மிர் கட்டண முறை மற்றும் மிர் கார்டுகளின் பயன்பாடு நாட்டில் அதிகரித்தது. இதன் மூலம் ரஷ்ய மக்கள் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை சேவைகள் தடையின்றி நடைபெற்றது.
மேலும் ரஷ்யாவின் நட்பு நாடுகள் மிர் கட்டண முறையை நாடுகளுக்கு இடையேயான பண பரிவர்த்தனைகளுக்கும், வர்த்தகத்திற்கும், ரஷ்யாவுடனான வணிகத்திற்கும் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில் கரீபிய நாடான கியூபா ரஷ்யாவின் மிர் கட்டண முறையை ஏற்றுக் கொண்டுள்ளதாக ரஷ்யாவின் தேசிய அட்டை அமைப்பின் தலைவர் விளாடிமிர் கோம்லேவ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மிர் கட்டண முறையில் 10வது நாடாக கியூபா இணைந்துள்ளது. இதைத்தொடர்ந்து வெனிசுலா நாடும் மிர் கட்டண முறையில் இணைய விரும்பியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளாடிமிர் கோம்லேவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே மிர் கார்டுகளை பயன்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cuba joins Russia mir payment system