1200 பேர் படுகொலை! அப்போ உங்க கண்கள் எங்கே இருந்தன - பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்!
Israel Rafah All Eyes on Rafah Where were your eyes on October 7
இஸ்ரேல் ராணுவம் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. காஸாவின் தெற்கே, எகிப்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ரஃபா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி உள்ள நிலையில், முழு அளவில் தாக்குதல் நடத்தாமல் குறைந்த அளவிலான தாக்குதலையே நடத்த உள்ளதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் வான் வழியாகவும் இஸ்ரேல் தற்போது தனது தாக்குதலை தொடங்கியுள்ளது, காஸாவின் வடக்கு பகுதியில் வசித்து வந்த பாலஸ்தீனியர்கள் தற்போது ரஃபா பகுதியில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சமயத்தில் ரஃபா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 13 லட்சம் மக்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியை உலக நாட்டு மக்கள் எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே நடத்திய வான் வழி தாக்குதலில் தற்காலிக முகாம்கள் மீது தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தைகளும் பலியாகினதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காசா மீது அனைத்து கண்களும் என்ற வசனத்துடன் கூடிய ஒரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பல்வேறு திரைப்படங்களும் இந்த புகைப்படத்தை வெளியிட்டு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் குழு தாக்குதல் நடத்திய போது, இன்று பரிதாபப்படும் உங்களுடைய கண்கள் எங்கே இருந்தது? என்ற வசனத்துடன் ஒரு குழந்தையின் முன் ஹமாஸ் பயங்கரவாதி துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படத்தை இஸ்ரேல் வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் எல்லைக்குள் புகுந்து 1200 பேரை ஹமாஸ் படையினர் கொலை செய்து, 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். இதன் காரணமாகவே தற்போது காசா மீது இஸ்ரவேல் தனது தாக்குதலை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கு 35 ஆயிரம் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
Israel Rafah All Eyes on Rafah Where were your eyes on October 7