இந்திய அரசால் தேடப்பட்ட காலிஸ்தான் புலிப்படை தலைவர் கனடாவில் சுட்டுக்கொலை...!
Khalistani tiger force chief Hardeep Singh Nijjar shot dead in Canada
இந்திய அரசால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான இவர் ,கனடாவின் சர்ரேயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)இரவு 8.27 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து அதிகாரிகளின் முதற்கட்ட தகவல்களின்படி, அடையாளம் தெரியாத இரண்டு ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதில் நிஜ்ஜார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் உடல் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படும்போது, அப்பகுதியிலிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில், பஞ்சாபின் ஜலந்தரில் ஒரு இந்து பாதிரியாரைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ரூ.10 லட்சம் பரிசு அறிவித்திருந்தது. மேலும் சமீபத்தில் 40 பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு வெளியிட்ட பட்டியலில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Khalistani tiger force chief Hardeep Singh Nijjar shot dead in Canada