நீயா? நானா? போட்டியில் நாடாளுமன்ற தேர்தல் - சுவீடனில் ஆட்சியமைக்கும் எதிர்கட்சிக் கூட்டணி..!
Parliamentary election competition in sweden
சுவீடன் நாட்டில் கடந்த 11 -ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சிக்கும், எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
நேற்று முன்தினம் இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சி நக நுனியில், தோல்வியைச் சந்தித்தது. எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி தலைமையிலான 4 கட்சி கூட்டணிகள் வெற்றி பெற்றது.
தனித்துவ மிக்க ஆட்சி அமைப்பதற்கு 175 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி கூட்டணி 176 இடங்களில் வெற்றிமாலையை சூடியது. ஆளுங்கட்சி 173 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதமர் மகதலேனா ஆண்டர்சன் இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுபற்றி பிரதமர் மகதலேனா ஆண்டர்சன் தெரிவிக்கையில், "நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு ஒன்றல்லது இரண்டு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. இது ஒரு மெல்லிய பெரும்பான்மை. ஆனாலும் அது ஒரு பெரும்பான்மைதான்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். அவர்தான் அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்நிலையில், சுவீடன் பிரதமர் மகதலேனா ஆண்டர்சன் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நார்லனிடம் அளித்தார்.
அது மட்டுமன்றி, அவரது கட்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்துள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது 4 கட்சிகளின் பூரண ஆதரவைப் பெறவில்லை. இதனால் மிதவாதக்கட்சியின் தலைவர் உல்ப் கிறிஸ்டெர்சன் சுவீடனின் புதிய பிரதமர் ஆகிறார், அவர்தான் புதிய ஆட்சியை அமைப்பார் என ஸ்டாக்ஹோமிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி உல்ப் கிறிஸ்டெர்சன் தெரிவிக்கும்போது, "நான் புதிய அரசை அமைப்பேன். முழு சுவீடனுக்கும், அனைத்து குடிமக்களுக்குமான ஒரு புதிய, நிலையான, வலுவான அரசை உருவாக்குவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Parliamentary election competition in sweden