பெண்கள் இருக்கும் இடங்களில் ஜன்னல்கள் அமைக்க தடை; ஆப்கானில் அத்துமீறும் தலிபான் அரசு..!
Taliban government violates this in Afghanistan
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது
புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் கட்டக்கூடாது. மீறி எங்காவது ஜன்னல்கள் இருந்தால், அத்தனையையும் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்நிலையில், பெண்கள் இருக்கும் பகுதிகளை யாருமே பார்த்துவிடக்கூடாது என்பதற்காக, குடியிருப்பு கட்டிடங்களில் ஜன்னல்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபானின் உச்ச தலைவர்,இந்த உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், "பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதைப் பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது குற்றச் செயலாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, நாட்டில் புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, அண்டை வீட்டாரின் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக்கூடாது.
ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை சுவர் எழுப்பியோ அல்லது அதை பார்க்க முடியாத வகையில் தடை செய்யவோ வேண்டும். இதனை வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் அண்டை வீட்டாருக்கு ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்கலாம்" என்றும் தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அறிவித்திருக்கிறார்.
இந்த உத்தரவை அனைவரும் கடைப்பிடிப்பதை கண்காணிக்கவும், புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதை உறுதி செய்யவும், இதற்கெனவே நகராட்சி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படுவதுடன், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று தலிபன்கள் ஆட்சி பொறுப்பை ஏற்கும்போதே உறுதியளித்திருந்தனர்.
ஆனால், அவர்கள் வெளியிட்டிருந்த அறிவிப்புக்கு மாறாகவே, அவர்களது செயல்பாடுகள் இப்போதுவரை இருந்து வருகின்றன. பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பெண் பிள்ளைகளுக்கான கல்வி, வேலை, பேச்சு சுதந்திரம் மேலும் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.
நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையிலேயே, இத்தகைய சட்டங்களை அமலுக்கு கொண்டுவந்துள்ளதாக தலிபான்கள் சொன்னாலும், இதற்கு உலக நாடுகளிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
English Summary
Taliban government violates this in Afghanistan