திருமணத்தில் ஸ்திரீ பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும்?
stree poruththam
ஸ்திரீ தீர்க்கம் பொருள் வளத்தையும், செல்வத்தையும், செல்வாக்கையும் வழங்குவது ஆகும். திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க உதவுவது இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம் ஆகும். திருமணத்திற்குப் பின்பு பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம் ஆகும்.
ஸ்திரீ தீர்க்கம் என்பது பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை ஆணின் நட்சத்திர தொடர்பை வைத்து எவ்விதம் மாறுபாடு அடைகிறது என்பதை வைத்து பொருத்தம் பார்க்கவேண்டும்.
பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் வந்தால் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தம் ஆகும். பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம், ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு என்பதாகும்.
இப்பொருத்தம் இல்லையெனினும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது எட்டாம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் பனிரெண்டாம் ஸ்தானம் அல்லது இரண்டாம் ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் கணிப்பார்கள்.
பெண் நட்சத்திரம் கார்த்திகை, ஆண் நட்சத்திரம் சதயம் என்றால் பெண் நட்சத்திரம் முதல் கார்த்திகை 1, ரோகிணி 2, மிருகசீரிஷம் 3 என்று எண்ண வேண்டும். ஆண் நட்சத்திரம் சதயம் 22 வது நட்சத்திரமாக வரும். எனவே ஸ்திரி தீர்க்க பொருத்தம் உண்டு.
பெண் நட்சத்திரம் அசுவினி என்றால், சித்திரை முதல் ரேவதி வரை உள்ள ஆணின் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீ தீர்க்க பொருத்தம் அமையும். இவை 13-க்கு மேற்பட்டவை. பரணி முதல் அஸ்தம் வரை 13 எண்ணிக்கைக்கு உட்பட்ட ஆண் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீ தீர்க்க பொருத்தம் அமையவில்லை எனலாம்.
ஆனால், இது கண்டிப்பான விதியாகாது. இதற்கும் விதிவிலக்குகள் உண்டு. மேலும், பெண் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ம் இடம் அல்லது 8-ம் இடத்தில் அமைந்துள்ள கிரகங்கள் அல்லது அந்த வீட்டுக்குரிய கிரகம் அமைந்துள்ள இடம், அதன் வலிமை ஆகியவற்றைத் தெரிந்த பின்பே முடிவு செய்ய வேண்டும். இதை ஜோதிடர்கள் கணித்துக் கூறுவார்கள்.
ஸ்திரீ தீர்க்க பொருத்தமிருந்தால் திருமகள் கடாட்சமும், சுபிட்சமும் நீடிக்கும். சகலவிதமான சம்பத்துகளும் (செல்வம்) விருத்தியாகும்.