தமிழ்நாடே எதிர்பார்த்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!! இந்த ஆண்டும் மாணவர்களை முந்திய மாணவிகள்..!!
10th Class Exam Result Released
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-2023ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மாணவர்கள் விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவிகளின் 94.66% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களில் தேர்ச்சி விகிதமானது 87.45% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளை பொருத்தவரை 92.24% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளை பொருத்தவரை 97.38% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தைப் பொறுத்தவரை 95.5% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தைப் பொறுத்தவரை 98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தைப் பொறுத்தவரை 95.54% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 95.75% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போன்று சமூக அறிவியல் பாடத்தில் 95.83% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோன்று நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலில் தமிழ் பாடத்தில் யாருமே நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறவில்லை. ஆங்கில பாடத்தில் 85 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 3,649 மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 3,684 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 320 மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொறுத்த வரை தேர்வு எழுதியவர்களில் 83.77% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
English Summary
10th Class Exam Result Released