எம்.பி., நவாஸ் கனியின் செயல் மதக்கலவரத்தை ஏற்படுத்தும்; தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம்..!
Tamil Nadu BJP leader Annamalai condemns MP Nawaz Kani
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, பேசியிருப்பது முற்றிலும் தவறான செயல்; இது இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் உள்ளது. அவரது இந்த செயல் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஹிந்துக்கள் புனிதமாக கருதும் மலைகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று. அந்த மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்ற சிலரை போலீசார் தடுத்தனர்.இதனை தொடர்ந்து, தங்களுக்கு வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி, சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
ஆனால் 'வழிபட தடையில்லை. உயிர்பலி கொடுக்க தான் தடை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பொருட்படுத்தாமல், கடந்த ஜனவரி 18இல் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி, சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலையேற முயன்றனர்.
இதனை, போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, ஹிந்து அமைப்புகள் போராடி வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இது தொடர்பாக மாவட்ட ஆளுநர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் பேசியதாகவும், சமைத்த அசைவ உணவை எடுத்து செல்ல தடை இல்லை என போலீஸ் கமிஷனர் கூறியதை அடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர் எனக்கூறியிருந்தார்.
இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; ஆன்மிக பூமியான தமிழகத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த ஆலயங்களுக்கும் அவற்றிற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன.
குறிப்பாக, எம்.பி., நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டதாக கூறியிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.
இத்தனை ஆண்டு காலமாக, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர். எம்.பி., அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது.
முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உடனடியாக, இது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாகத் தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே தொடர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
English Summary
Tamil Nadu BJP leader Annamalai condemns MP Nawaz Kani