ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் .. தாய்ப்பாலின் நன்மைகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்வோமா..?!
Health Benefits Of Breast Feeding
குழந்தை பெற்றவுடன் தாய்மார்களுக்கு முதலில் சுரக்கும் பால் தான் சீம்பால் என்று சொல்லப் படுகிறது. இது தான் பிறந்த குழந்தைக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய முதல் உணவு மற்றும் தடுப்பூசியும் கூட என்று சொல்லலாம். இந்த சீம்பாலில் 'இம்யூனோகுளோபுலின் ஏ' என்ற நோய் எதிர்ப்பு புரதம் ஏராளமாக நிறைந்துள்ளது.
இது தான் பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட எந்த ஒரு நோய்த் தொற்றும் குழந்தைகளைத் தாக்காமல் பாதுகாக்கிறது. சீம்பாலுக்கு அடுத்ததாக சுரக்கும் தாய்ப் பாலில் குழந்தைகளுக்குத் தேவையான கொழுப்பு, புரதம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி, கார்போஹைட்ரேட், தாதுக்கள், லாக்டோஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆரம்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவைப்படும் கொழுப்பு அமிலங்களும், அமினோ அமிலங்களும் தாய்ப்பாலில் மட்டுமே அடங்கியுள்ளன. எனவே குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தண்ணீர் கூட கொடுக்கத் தேவை இல்லை என்று அறிவுறுத்தப் படுகிறது.
குழந்தையின் உடலில் உள்ள நோய்க் கிருமிகளை அழித்து வெளியேற்றி, குழந்தையின் முழுமையான உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் தான் உதவுகிறது. அதோடு தாய்க்கும், குழந்தைக்குமான பாசப் பிணைப்புக்கும் உதவுகிறது.
மேலும் தாய்ப்பால் தருவதால் கருத்தரிக்கும் வாய்ப்பும், கருப்பை மற்றும் பிறப்புறுப்பு புற்றுநோய் ஆபத்தும் தடுக்கப் படுகிறது. பிரசவத்திற்குப் பிறகான உதிரப்போக்கு கட்டுப்படுத்தப்படும். தாயின் வயிறு பழைய வடிவத்தைப் பெறும். குழந்தை எடை குறைவாகப் பிறந்திருந்தால் தாய்ப்பால் அதிகம் கொடுக்க வேண்டும். பொதுவாக இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.
English Summary
Health Benefits Of Breast Feeding