அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்; பிரதமர் மோடி கண்டனம்..!
15 people have died in a terrorist attack in the US
அமெரிக்காவில் நேற்று நடந்த பயங்கரவாத கார் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வேகமாக கூட்டத்துக்குள் புகுந்ததில் 15 பேர் உயிரிழந்ததோடு,30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உடனே போலீசார் அந்த காரை மடக்கி பிடிக்க முற்பட்டபோது, காரை ஓட்டிய நபருக்கும், போலீசாருக்கும்இடையே துப்பாக்கி சண்டை நடந்ததில்,அந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
குறித்த பயங்கரவாத கார் தாக்குதலை நடத்தியவர் டெக்சாஸை சேர்ந்த 42 வயதான 'ஷாம்ஷத் டின் ஜப்பார்' என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய காரில் வெடிகுண்டு, துப்பாக்கி, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி ஆகியவை இருந்துள்ளது. குறித்த நபர் பலரை கொலை செய்யும் நோக்கத்துடன் இத்தாக்குதலை நடத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "நியூ ஆர்லியன்சில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இந்த சோகத்திலிருந்து மீள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
15 people have died in a terrorist attack in the US